டெல்லி:

ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டில் மத்திய அரசின் தலையீடு இருப்பதாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

ப.சிதம்பரம்

ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு ரிசர்வ் வங்கி கவர்னர் ஊர்ஜித் படேலுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது. அதில் பணமதிப்பிழக்க அறிவிப்பு பிறகு வங்கி ஊழியர்கள் அவமானத்தை சந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தோடு மத்திய அரசு மோதும் வகையில் அதிகாரி ஒருவரை ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்துள்ளது என்று அந்த கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கியை மத்திய அரசின் இணைச் செயலாளர் இயக்குகிறாரா? என்று ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டமைப்பின் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய நிதியமைச்சகம், ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்திற்கு மத்திய அரசு முழு மதிப்பு கொடுக்கிறது. பொது மக்கள் சார்ந்த முடிவுகள் எடுக்க ஏதுவாக ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கு சட்டரீதியான ஆலோசனை வழங்க தான் நியமனம் செய்யப்பட்டது. வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ளும் திட்டம் கிடையாது என்று தெரிவித்துள்ளது.

மேலும், ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் யாகா வேணுகோபால் ரெட்டி பணமதிப்பிழப்பு அறிவிப்பை விமர்சனம் செய்துள்ளார். அவரது விமர்சனத்துக்கு ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இதை ஆதரித்த பாரதிய மஸ்தூர் சங்கமும் தற்போது ஏற்பட்டுள்ள பண பற்றாக்குறை, வேலை இழப்பு, விவசாயிகள் பாதிப்பு உள்ளிட்ட விஷயங்களை ஆராய்ந்துவிட்டு தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருவது வரவேற்கத்தகது என்றும் சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.