டெல்லி:
காதி கிராம தொழிற்சாலைகள் ஆணையத்தின் 2107ம் ஆண்டு காலண்டரில் மகாத்மா காந்தி புகைப்படத்தை அகற்றிவிட்டு மோடி தனது புகைப்படத்தை வெளியிட செய்துள்ளார்.
ஆண்டுதோறும் இந்த அலுவலகம் சார்பில் வெளியிடப்படும் காலண்டர், டைரியில் மகாத்மா காந்தி ராட்டை சுற்றும் புகைப்படம் வெளியிடப்படும். மகாந்மா காந்திக்கே உரித்தான இந்த புகைப்படம் இல்லாமல் வெளியான காலண்டரை பார்த்து அதிகாரிகளும், ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
மகாத்மா காந்திக்கு பதிலாக மோடி ராட்டை சுற்றும் புகைப்படம் பிரசுரமாகியிருந்தது. ஒட்டுமொத்த காதி தொழில் என்பது காந்தியின் தத்துவம், ஆலோசனை போன்றவற்றால் உருவானது. இந்த தொழிலின் ஏகாதிபதி காந்தி தான் என்பதில் ஆச்சர்யமில்லை.
ஆனால், மேக் இன் இந்தியா திட்டம் மூலம் கிராமப்புறங்களில் உள்ள காதி தொழிலில் தொழில்நுட்ப வளர்ச்சிகளை கொண்டு வந்தவர் மோடி.
திறன் மேம்பாடு உள்ளிட்ட பல பல புதுமைகளை புகுத்தி, நவீன தொழில்நுட்பத்துடன் காதி துறையை மேம்படுத்தியவர் மோடி. இதன் அடிப்படையில் தான் அந்த புகைப்படம் வெளியிடப்ப்டடுள்ளது என்று அந்த ஆணைய தலைவர் வினய் குமார் சக்சேனா தெரிவித்துள்ளார்.
ஆனால், இது எங்களுக்கு பெரிய வலியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு மோடி புகைப்படத்தை முதல் கட்டமாக காலண்டரில் திணித்தனர். தற்போது அடுத்தகட்ட பணியை மேற்கொண்டுள்ளனர் என்று மூத்த ஊழியர் ஒருவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.
கடந்த ஆண்டே தொழிற்சங்கங்கள் மோடி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது சரி செய்யப்படும் என்று நிர்வாகம் கூறியது. ஆனால், இந்த முறை அடியோடு காந்தியை அகற்றிவிட்டனர் என்று மற்றொரு ஊழியர் தெரிவித்தார்.
மோடியின் இந்த செயல் மகாத்மா காந்தியை அவமதிக்கும் செயல் என்று காந்தியின் பேரன் துஷர் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.