யாரும் எதிர்பாராத வேளையில் அதிரடியாக திடீரென்று டிவியில் தோன்றி கறுப்புப் பணத்தையும், கள்ள நோட்டுக்களை ஒழிப்பதற்காகவும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பணம் பயன்படுத்தப்படுவதை முடக்கவும் போவதாக சொல்லி பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதித்து 50 நாட்களை கடந்துவிட்டது. அவர் சொன்னதைக் கேட்டு டிசம்பர் 30-க்கு பின்னர் ஏதோ அற்புதம் நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.
கள்ளநோட்டு மற்றும் கறுப்புபணத்தை ஒழிக்கத்தான் பிரதமர் மோடி இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கிறார் எனவே நாட்டு நலனுக்காக கொஞ்சம் பொறுத்துக்கொள்ளலாம் என்று பொறுமை காத்த நடுநிலையாளர்கள்கூட கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி கறுப்புப்பணம் மற்றும் கள்ள நோட்டு ஆகியவற்றைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டு பணமில்லா வர்த்தகத்துக்கு திரும்புங்கள் என்று திரும்ப திரும்ப பேச ஆரம்பித்திருப்பதை சந்தேகக்கண்ணுடன் பார்க்க தொடங்கியிருக்கிறார்கள். அப்படியானால் மக்களின் குடுமியை வங்கிகளின் கையில் பிடித்து கொடுக்கத்தான் இந்த திட்டமா? என்று வெளிப்படையாகவே பலர் பேச தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் நோட்டுத்தடைக்கு பின்னால் என்னதான் மர்மம் இருக்கிறது என்பதை அறிய பலரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் ரிசர்வ் வங்கி மீதும், நிதியமைச்சகம் மீதும் மனுக்கள் தாக்கல் செய்யபட்டுள்ளன. ஆனால் இதுவரை எந்த மனுவுக்கும் பதில் இல்லை.
நோட்டுத்தடை குறித்து விவாதிக்க கூட்டப்பட்ட கூட்டங்களின் விபரம், அதில் பங்கு கொண்டவர்கள் யார்? அதில் என்ன விவாதிக்கப்பட்டது (minutes of the meeting), என்ன முடிவுகள் எடுக்கப்பட்டன? அது சம்பந்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தின் நகல்களும் பொதுவில் பகிரப்பட வேண்டும் போன்ற விஷயங்கள் தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் கோரப்பட்டுள்ளது. அரசு பதில் தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிரதமர் மோடி சொன்ன காலக்கெடு முடிந்துவிட்டதால் அவர் தன் அமைதியை கலைத்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதுவரை கறுப்பு பணமாக பிடிபட்ட பணம் எவ்வளவு? இதுவரை எவ்வளவு பணம் திரும்ப வந்திருக்கிறது? இந்த நோட்டுத்தடைக்கு உண்மை காரணம்தான் என்ன? கறுப்பு பணமா? கள்ள நோட்டா? ஊழலா அல்லது மக்களை பணமில்லா வர்த்தகத்துக்குள் தள்ளும் உள்நோக்கமா? என்பதை அவர்தான் மக்களுக்கு விளக்கவேண்டும்.
உண்மையில் எதுவுமே வெளிப்படையாக இல்லாமல் இருப்பது, குழப்பமான தகவல்களை தருவது, நோட்டுத்தடை குறித்து நடைபெற்ற ஆலோசனைகளின் நகல்களை தர மறுப்பது, நாடாளுமன்றத்தில் பதிலளிக்காமல் தவிர்ப்பது போன்றவை மக்களுக்கு அரசின் உண்மையான நோக்கம் குறித்த சந்தேகத்தையே அதிகப்படுத்தும்.
Prime Minister Modi has a lot to say about demonetisation but his government is stonewalling RTI queries