லசோர் : கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையை இன்று இந்தியா சோதனை செய்ய இருக்கிறது.
அக்னி – 5 ஏவுகணையின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்ததையடுத்து, ஒடிசா மாநிலம் வீலர் தீவிலிருந்து இன்று (டிச.,26) சோதனை செய்து பார்க்கப்பட உள்ளது.
இந்த அக்னி 5 ஏவுகணை 5,500 முதல் 5,800 கி.மீ.,க்கும் அதிகமான தொலைவில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. குறிப்பாக வடக்கு சீனா வரை சென்று தாக்கும் திறனுள்ளது.
அக்னி 1 (700 கி.மீ.,), அக்னி 2 (2,000 கி.மீ.,) மற்றும் அக்னி 3 (2,500 கி.மீ.,) ஏவுகணைகள் பாக்.,குக்கு எதிரான பாதுகாப்பு நோக்கத்துடன் தயாரிக்கப்பட்ட நிலையில் அக்னி 4 (2,500 முதல் 3,500 கி.மீ.,) மற்றும் அக்னி 5 (5,500 முதல் 5,800 கி.மீ.,) சீனாவுக்கு எதிரான பாதுகாப்பு நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் சொல்லப்படுகிறது.
50 ஆயிரம் கிலோ எடை கொண்ட அக்னி-5, 17.5 மீ., நீளமும், 2 மீ., விட்டமும் கொண்டது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணையின் முதலிரண்டு சோதனைகள் 2012, ஏப்., 19ம் தேதியிலும், 2013, செப்.,15ம் தேதியிலும் மாதத்திலும் நடத்தப்பட்டது. இந்த ஏவுகணையின் 3வது சோதனை 2015, ஜன.,31ம் தேதியிலும் நடத்தப்பட்டுள்ளது.
அக்னி 5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் ஏவி சோதனை செய்யும் பட்சத்தில் ‘சூப்பர் எக்ஸ்க்ளூசிவ் கிளப்’ நாடுகளின் பட்டியலில் சேர வாய்ப்புள்ளது. இதற்கு முன் அதிக தொலைவில் சென்று தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்த நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் மட்டுமே உள்ளன.