நியூஸ்பாண்ட்:

சமீப நாட்களாகவே தமிழகத்தில் “அதிரடி” செய்திகளாகவே வந்தபடி இருக்கின்றன. நேற்று, தலைமைச் செயலாளர் ராம்மோகன்ராவ் வீட்டில் வருமானவரி துறையினர் அதிரடி சோதனை. இன்று அவர் அதிரடி நீக்கம். அதோடு, புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் அதிரடி நியமனம்.
யார் இந்த கிரிஜா வைத்தியநாதன்?
1959 தஞ்சையில் பிறந்த கிரிஜாவுக்கு சிறு வயதில் இருந்தே படிப்பில் சிறந்து விளங்கினார். இந்தியாவில் புகழ் பெற்ற கல்வி நிறுவனமான ஐஐடியில் படித்து பட்டம் பெற்றார். நலவாழ்வு மற்றும் பொருளாதாரம் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.
1981ம் ஆண்டு பணியில் சேர்ந்த கிரிஜாவின் பதவிக்காலம்,, 2019 வரை இருக்கிறது.
சுகாதாரத்துறையில் தொடர்ந்து 15 ஆண்டுகள் செயலாளராக பணியற்றியவர் இவர்.
தலைமைச் செயலாளராக மட்டுமல்லாமல், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் கண்காணிப்பு ஆணையர் பதவிகளையும் கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரது தந்தை வெங்கட ரமணன், ரிசர்வ் வங்கி கவர்னராக 1990 முதல் 1992 வரை இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

எப்படிப்பட்டவர் கிரிஜா?
பொதுவாகவே, அதிகாரிகள்.. அதுவும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் என்றால், ஆட்சியாளர்களுக்கு அணுக்கமாக இருப்பார்கள்.
தவிர, கிரிஜா பாரதீய ஜனதாவில் உள்ள நடிகர் எஸ்.வீ.சேகருக்கு நெருங்கிய உறவினர் இவர். ஆக (மறைமுகமாக தமிழகத்தை ஆளும்?) பா.ஜ.கவுக்கு ஆதரவாக இருப்பாரா?.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சி காலங்களில் இவர் பணியாற்றியிருந்தாலும், எந்தவொரு கட்சி முக்கியஸ்தர்களுக்கும் ஆதரவாக செயல்பட்டதில்லை. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே செயல்படுவார்.

அதிமுக அரசு 2011-ல் ஆட்சிக்கு வந்தபோது, சுகாதாரத்துறை செயலாளராக பொறுப்பு வகித்த கிரிஜா, அப்போது அதிகம் பேசப்பட்ட “முதலமைச்சர் காப்பீடு திட்டம்” உருவாகுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டவர்.
இவர் சுகாதாரத்துறையில் பணியாற்றிய போது, அப்போதைய முக்கியஸ்தர் ஒருவர், சில கோரிக்கைகளை இவரிடம் வைத்திருக்கிறார். எந்தவித தயவு தாட்சண்யமும் இல்லாமல், “எல்லாம் சட்டப்படிதான் நடக்கும்” என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார் கிரிஜா.
இதையடுத்து இவரைப் பற்றி அப்போதைய “மிக” முக்கியஸ்தரிடம் “புகார்” போனது. அப்போது அந்த “மிக” முக்கியஸ்தர், “சில அதிகாரிங்களாவது சரியா செயல்படட்டுமே.. விடுய்யா” என்றாராம் சிரித்தபடி..
தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் நற்பெயர் பெற்றவர் கிரிஜா. மதுரை மாவட்ட ஆட்சி தலைவராக இருந்த போது, இவர் எடுத்த நடவடிக்கைகளை இன்றும் அம் மாவட்ட மக்கள் மதிப்புடன் நினைவுகூர்கிறார்கள்.
“யாருக்கும் தலையாட்டாதவர் இந்த தஞ்சாவூர்க்காரர். மிகச் சரியான நபர், மிகச் சரியான சமயத்தில் தலைமைச் செயலாளராக ஆகியிருக்கிறார். தமிழகத்துக்கு இது நல்லது” என்கிற பேச்சு, கோட்டை ஊழியர் வட்டாரத்தில் அடிபடுகிறது.
நல்லது நடந்தால் சரி!
Patrikai.com official YouTube Channel