அகமதாபாத்:
குஜராத் முதலமைச்சராக மோடி இருந்தபோது பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரம் உள்ளது என காங்கிரஸ் ராகுல்காந்தி பேசினார்.
குஜராத் மாநிலம் மெக்சானாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:
ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையானது ஊழல் மற்றும் கருப்பு பணத்திற்கு எதிரானது கிடையாது. மாறாக நேர்மையான மக்களுக்கு எதிரானது. குஜராத் முதலமைச்சராக இருந்த போது பிரதமர் மோடி பெருமளவு லஞ்சம் பெற்றார்.
கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி சகாரா நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. வருமான வரித்துறையிடம் சிக்கிய முக்கிய ஆவணங்கள் கடந்த இரண்டரை வருடங்களாக உள்ளது. இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும். பிர்லா வழங்கிய தொகை தொடர்பான ஆவணங்கள் உள்ளது. இப்போது பிரதமராக உள்ள மோடி இது உண்மையா? இல்லையா? என்பதை நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பிரதமர் மோடி உண்மையை பேச வேண்டும். குற்றமில்லாதவர் என்பதை மோடி நிரூபிக்க வேண்டும். முதலமைச்சராக இருந்த போது சகாராவிடம் இருந்து மோடி பணம் வாங்கியது தொடர்பாக ஆவணங்கள் உள்ளது. வருமான வரித்துறை நடத்திய சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 6 மாத காலங்களில் பிரதமர் மோடிக்கு அவர்கள் 9 முறை வழங்கிய பணம் தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு ராகுல் பேசினார்.
வருமான வரித்துறை தகவல்களின் படி பிரதமர் மோடிக்கு கடந்த 2013-ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி ரூ. 2.5 கோடி வழங்கப்பட்டு உள்ளது. அதே ஆண்டு நவம்பர் 12-ம் தேதி ரூ. 5 கோடி வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 27-ம் தேதி ரூ. 2.5 கோடி வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 29-ம் தேதி ரூ. 5 கோடி வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6-ம் தேதி பிரதமர் மோடிக்கு ரூ. 5 கோடி வழங்கப்பட்டுள்ளது. 19-ம் தேதி ரூ. 5 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2014 ஜனவரி 13-ம் தேதி ரூ. 5 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஜனவரி 28-ம் தேதியும், பிப்ரவரி 22ம் தேதியும் ரூ. 5 கோடி வழங்கப்பட்டு உள்ளது என்றும் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு எதிராக அடிப்படையற்ற குற்றாச்சாட்டுகளை சுமத்துவது என்பது காங்கிரஸ் கட்சிக்கு வழக்கமாகிவிட்டது என பாஜ குற்றம்சாட்டியுள்ளது. மேலும், ராகுல் காந்தியே ஒரு தீவிரமற்ற பகுதிநேர அரசியல்வாதி எனவும் பாஜ கருத்து தெரிவித்துள்ளது.
Rahul lashes out at Modi in Mehsana. Modi took bribes from industrialist while he was Chief Minister of Gujarat. Took bribes from Birlas and Sahara companies