கல்கத்தா,
ஏற்கனவே டீ விற்பனை செய்து வந்த மோடி தற்போது பே-டிஎம்ஐ ஆதரித்து பேசுகிறார் என்று மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடி உள்ளார்.
கடந்த 8ந்தேதி இரவு முதல் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் செல்லாது என்று மோடி அறிவித்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் மக்களிடையே பணப்பபுழக்கம் சரியாகவில்லை.
மோடியின் அறிவிப்புக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இதற்கிடையில் மேற்குவங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா, பிரதமர் மோடியை, முன்பு ‘சாய்வாலா’வாக இருந்த மோடி தற்போது ‘பே-டிஎம் வாலா’வாகிவிட்டார் என்று கடுமையாக சாடி யுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பாங்குராவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா, “தேர்தலுக்கு முன்பு அவர் தேநீர் விற்றவர், தற்போது பேடிஎம் ஆதரவாளராக மாறி விட்டார். சாதாரண மக்களின் துயரங்கள் மோடி அரசின் காதுகளுக்கு விழுவதில்லை, சாமானிய மக்களின் துயரங்களைப் பேச முடியாத ஊமையாகிவிட்டார் என்றார்.
மேலும் சாமானிய மக்கள், நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பெண நெருக்கடியை புரிந்து கொள்கின்றனர், ஆனால் பிரதமர் எப்போது புரிந்து கொள்ளப்போகிறார் என்று தெரியவில்லை என்றார்.
மேலும் பண விவகாரத்தில் பணத்தை எங்கு போட வேண்டும் என்றும் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மக்கள் எந்த மொபைல் போன் வாங்க வேண்டும் என்பதையும், எந்த ஆப் டவுன்லோடு செய்ய வேண்டும் என்பதையெல்லாம் நீங்கள் கூற முடியுமா? அதுபோல் எங்கு பணத்தைப் போட வேண்டு மென்றுதான் நீங்கள் எப்படி கூற முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
பிரதமர் தன்னைத் துறவி என்று கூறினார், ஆனால் மக்கள்தான் தற்போது காசு பணமில்லா துறவிகளாகி யுள்ளனர்” இதற்கு காரணம் மோடிதான் என்று கடுமையாக பேசினார்.