டெல்லி:
பிஎஸ்என்எல்-ன் பிரதான சொத்துக்களில் ஒன்றான அதன் டவர்களை தனியாக ஒரு நிறுவனம் மூலம் நிர்வகித்து கூடுதல் வருவாய் ஈட்ட மத்திய அரசு ஆரம்ப கட்ட ஒப்புதல் அளித்துள்ளது.

பிஎஸ்என்எல் வசம் 65 ஆயிரம் டவர்கள் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இந்த டவர்கள் மூலம்  தான் பிஎஸ் என்எல் கனிசமான லாபத்தை ஈட்டியது. இவற்றை நிர்வகிக்க புதிய நிறுவனத்தை உருவாக்க, அதற்கான முதலீடு உள்ளிட்ட பல விஷயங்களை முடிவு செய்ய பொதுத் துறை நிறுவனம், ஓய்வுபெற்றோர்  நலத்துறை, பொருளாதார விவகாரத் துறை ஆகிய துறை பிரதிநிகளை கொண்ட குழுவை  தொலைத்  தொடர்பு அமைச்சகம் அமைத்தது.
இதன் மூலம் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி திரட்டும் வாய்ப்பு கிடைக்கிறது.  இந்த டவர்கள் மூலம் 200 கோடி ரூபாயை பிஎஸ்என்எல் வருவாயாக  ஈட்டியது. விரைவில் இது 2 ஆயிரம் கோடியாக உயரும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த நிலையில் தான் டவர்களை புதிய நிறுவனம் மூல் நிர்வகிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய நிறுவனம் 8 ஆயிரம்  முதல் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானதாக இருக்கும். இந்த திட்டத்திற்கு பிஎஸ்என்எல் வாரியம் ஏற்கனவே அனுமதி வழங்கிவிட்டது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிஎஸ்என்எல் ஏற்கனவே 4 ஆயிரத்து 500 டவர்களை ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துக்கு ஒப்பந்த  அடிப்படையில் வழங்கியுள்ளது. ஏர்டெல் நிறுவனத்துக்கு ஆயிரத்து 500 டவர்களையும் வழங்கியுள்ளது.  தனியார் செல்போன் நிறுவனங்கள் கூடுதல் முதலீடுகளை தவிர்த்து நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல்  கட்டமைப்புகளை பயன்படுத்தி வருகின்றன.
பிஎஸ்என்எல் நிறுவனம் போட்டி காரணமாக கடந்த 2009&10ம் ஆண்டில் ஆயிரத்து 823 கோடி ரூபாய்  நஷ்டத்தை சந்தித்தது. இந்த தொகை தற்போது 7 ஆயிரத்து 600 கோடியாக உயர்ந்துள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.