மாதங்களில் நான் மார்கழியாக  இருக்கிறேன் என்றான் கண்ணபிரான்.
மார்கழி என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது ஒவ்வொரு வீட்டின் முகப்பிலும் மிளிரும் அழகிய கோலங்கள்.

மார்கழியின் பெருமையை ஆண்டாள் “மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்’ என்ற பாடலில் விளக்குகிறார்.
மாணிக்கவாசகரும் திருவெம்பாவையில், “போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்’ – என்று மார்கழி நீராடலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
மார்கழி மாதத்தில் ஆயர் மகளிர் காத்தியாயினியை வழிபட்டு, அவியுணவு உண்டு கண்ணனை அடைந்தார்கள்.
பிற மாதங்களில் கோலமிடும் பழக்கம் இருந்தாலும், மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து கோலமிட்டு அதில் பசுஞ்சாணத்தில் பூசணி பூ வைத்து வழிபடும் வழக்கம் நம் மக்களிடையே உள்ளது.

அதிகாலையில் பெய்யும் பனிப்பொழிவானது நள்ளிரவில் பெய்யும் பனியைவிட மென்மை யானதாக, தாக்கம் குறைந்ததாக, விஷத்தன்மையற்றதாக இருக்கும். எனவே, சூரியக்கதிர் பரவுவதற்கு முன்னதாக வாசல் தெளித்து கோலமிடும்போது மார்கழி மாத தட்பவெப்ப நிலைக்கு உடல் ஒத்துப் போகும்.
பெரிய நோய்கள் ஏற்படாமல் தடுத்துக் கொள்ள முடியும். மாறாக பனிப்பொழிவுக்கு பயந்து வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் உடல்நலம் மேம்படாது. வாசலில் கோலமிட்ட பின்னர் விளக்கு வைத்து வழிபட வேண்டும் என முன்னோர்கள் கூறியதற்கு காரணம் விளக்கு வைப்பதால் அதிலிருந்து வெளியேறும் வெப்பம் வீட்டை கதகதப்பாக வைக்க உதவும்.
சீதோஷ்ண நிலையும் சமனடையும். சாணத்தின் மீது வைக்கப்படும் பூசணிப்பூ, பரங்கிப்பூ ஆகியவை வெளியேற்றும் வாசனை பனிக்காற்றில் கலந்து சிறந்த கிருமி நாசினியாகத் திகழும் என்பதால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே, இரவில் கோலமிடுவதைத் தவிர்க்க வேண்டும். அதிகாலையில் ஓஸோன் வாயுக்கள் அதிகம் வெளியேறும். அந்த நேரத்தில் கோலமிடுவதால், சுவராசப்பிரச்சனைகள் தீரும். புத்துணர்ச்சி ஏற்படுத்தும்.

மார்கழி மாதத்தில் கரும்பு, நெல், உளுந்து, வாழை, மஞ்சள் போன்றவற்றை வீட்டில் சேர்க்கவே பொழுது சரியாயிருக்குமென்பதால் தான் திருமண நன்னாள்கள் மார்கழியில் இல்லை.
மார்கழி மாதம் தேவர் மாதம் என்று சொல்லப் படுகிறது. அதாவது கடவுளை வழிபடுவதற்காக இம்மாதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இந்த மார்கழி மாதத்தில் தான் அனுமத் ஜெயந்தியும், வைணவ திருத்தலங்களின் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசியும், சைவ திருத்தலங்களின் முக்கிய விழாவான திருவாதிரை ஆருத்ரா தரிசனமும், வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.
வைணவ திருக்கோவில்களில் மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை பாடுவர். இந்த மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்கு பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள்.
சிவாலயங்களில் திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சியும் இம்மாதத்தில் பாடப்படுகிறது.

மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வேண்டி பாவை நோன்பிருப்பர். அத்தகைய நோன்பின் பலனாக தை மாதத்தில் அவர்களின் நல்வாழ்வுக்கான வழியமையும் என்பதை மனதில் கொண்டு “தை பிறந்தால் வழி பிறக்கும்” எனும் பழமொழியும் வழக்கில் வந்ததாக ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
மார்கழி மாதத்தின் கடைசி தினத்தன்று கோவில்களில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறும்.
மார்கழி மாதம் தனுர் மாதம் ஆகும். தட்சிணாயன காலம் மார்கழியுடன் முடிவடைகிறது;
சூரியனுடைய தெற்கு இயக்கம் முடிவடையும் காலம். இந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு பல பிரச்சினைகளைத் தரக்கூடியது.

அதிகாலையிலேயே எழுந்து நீராடி, இறைவனை வழிபடுவதால், நாடி நரம்புகள் வலுவடை கின்றன.  நீண்ட ஆயுளும் சித்திக்கிறது. மேலும் தியானம், ஆன்மிகம், வழிபாடு என்று மனத்தை ஒருமுகப்படுத்துவதாலும் பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே தான் உலக வழக்கங்களுக்காக இல்லாமல்,
இறைவனை வழிபடவென்றே மார்கழி மாதத்தை ஒதுக்கியிருக்கிறார்கள்.
அதனால் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மிகம் என்று இருந்தால் சாதகமான அதிர்வுகளைக் கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறார்களே தவிர கெடுதலான மாதம் கிடையாது.