அமெரிக்காவில் ஒரு திருப்பதி
பெரும்பணக்கார நாடான அமெரிக்காவில் அதி பணக்காரப் பெருமாளாகிய வெங்கடாசலபதி அழகாய்க்கோயில் கொண்டிருக்கிறார்
எங்கே?
‘சிட்டி ஆஃப் பிரிட்ஜ்’ என்றும், ,எஃகு நகரம் எனவும் அழைக்கப்படுகிறது பிட்ஸ்பர்க். அதில்தான் அவர் கோயில் கொண்டிருக்கிறார்.
அமெரிக்காவின் பென்சில்வேனிய மாகாணத் தலைநகரம் பிட்ஸ்பர்க். வட அமெரிக்காவின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றும் கூட! அலகேனி, மொனொகஹேலா, ஓஹையோ ஆகிய மூன்று ஆறுகள் இந்நகரத்தில் ஓடுகின்றன.
ஒருசமயம், மகாவிஷ்ணுவும், மகா லட்சுமியும் ஏகாந்தமாக இருந்தபோது, அங்கு சென்றார் பிருகு முனிவர்.அவர் வந்ததை திருமால் கவனிக்காததால், சினத்தோடு திருமாலின் மார்பிலே எட்டி உதைத்தார். தன்னை எட்டி உதைத்ததால் முனிவருக்குக் கால் வலிக்குமே என்று தடவிவிட்டார் பெருமான்.திருமாலின் திருமார்பில் இருப்பவள் மகாலட்சுமி ஆயிற்றே! தன்னை விட முனிவர் முக்கியமானவராக ஆகிவிட்டாரா? என்று அவளுக்குக் கோபம் பொத்துக்கொண்டு வர, திருமாலை விட்டுப் பிரிந்து பூலோகத்தில் உள்ள கோல்ஹாபூர் சென்று தனித்திருந்தாள்.
திருமகள் பிரிந்ததும் செல்வம் யாவும் இழந்த பெருமாள் கவலையுற்று, மகாலட்சுமியைத் தேடி பூவுலகு வந்தார்.
ராமாவதாரத்தில் வேதவதியாக இருந்த பத்மாவதிக்கு அளித்த வாக்கின்படி இந்த அவதாரத்தில் அவளை மணம் புரிந்தார். அப்போது குபேரனிடம் ஒரு கோடியே பதினான்கு லட்சம் தங்க நாணயங்கள் கடன் வாங்கினார் பெருமாள். பின் மகாலட்சுமியும் கோபம் தணிந்து வர, உலகின் நம்பர் ஒன் பணக்காரக் கடவுளாகத் திகழுமளவுக்குப் பொன்னும் பொருளும் குவிகிறது திருப்பதியில்!!
திருப்பதியில் நின்று வரமளித்தருளும் அந்த ஏழுமலையானைத் தரிசிக்கத் துடித்தனர், புலம்பெயர்ந்து இங்கே வந்திருக்கும் பல்லாயிரம் இந்தியர்கள்.
திருப்பதிக்கு ஒப்பான ஒரு கோயிலை எழுப்ப வேண்டும் என்று தீவிரமாக முனைந்தனர்.
வெளேரென்று கம்பீரமாக உயர்ந்து நின்று காட்சியளிக்கிறது கோபுரம்.
ஆந்திர அரசும் திருமலை திருப்பதி தேவஸ்தானமும் முழு ஆதரவு அளித்து கட்டப்பெற்ற இக்கோயில் அமெரிக்காவின் திருப்பதி என்றும் அழைக்கப்படுகிறது!
1970களில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஒன்று கூடி, ‘இந்து டெம்பிள் சொசைட்டி ஆஃப் நியூயார்க்’ என்ற அமைப்பினைத் தொடங்கினர். 1972ல் அதற்கு ஒப்புதல் அளித்த தேவஸ்தானம் ஏழு லட்சம் ரூபாய் நிதியையும் தந்து உதவியது.
பின்னர் ‘இந்து சொசைட்டி ஆஃப் பிட்ஸ்பர்க்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. கணபதி ஸ்தபதி தலைமை யில் 1973ல் கோயில் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, 1975ல் இந்திய நாட்டு அம்பாசடர் முன்னிலையில், திருப்பதி தேவஸ்தானத்தின் முழு ஊக்கத்துடனும் கோயில் கட்டுமானப் பணி தொடங்கியது. அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலரும் நன்கொடைகள் தந்தனர்.
ஆண்டாள் சன்னதி மற்றும் மகாலட்சுமித் தாயார் சன்னதிகளோடு கட்டப்பட்டது.
1977-ல் ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. கும்பாபிஷேகமும் நடந்தது.
அதன்பின் உரிய இடைவெளிகளில் குடமுழுக்கு நடத்தப்பட்டு கடைசியாக 2009-ல் கும்பாபிஷேகம் நடந்தேறியிருக்கிறது.
கோயில் முழுக்க ‘ஃபால்ஸ் ரூஃபிங்க்’ செய்து மூடியிருக்கிறார்கள்…ஹீட்டர் வசதி உள்ளது. நடக்கும் பாதை முழுதும் ‘கார்பெட்’ விரித்துள்ளார்கள்.
முதலில் பிள்ளையாரின் சன்னதி. ஆனைமுகனை வணங்கிவிட்டுப் படியேறினால் பிட்ஸ்பர்க் வெங்கடாசலபதியின் நின்ற திருக் கோலத்தைக் கண்டு பிரமித்துப் போகிறோம். ..எம்பிரானை இன்றைக்கெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கலாம்.
ஆண்டாள், தாயார் சன்னதிகளும் அழகு மிளிர்கின்றன. அவர்களின் அலங்காரமம் எப்போதும் அற்புதமாக ஜொலிக்கிறது.
கோயிலினுள் அமெரிக்கர்கள் கூட கைங்கர்யம் செய்வது வழக்கம்.
இக்கோயிலில் தொண்டு செய்யும் பட்டாச்சாரியார்கள் பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் தேர்ச்சி பெற்றவர்களாம்.
சஹஸ்ரநாம அர்ச்சனை, அபிஷேகம் முதல் கல்யாண உத்சவம் வரை எல்லாமே மணம் செலுத்திச்செய்யலாம்.
கோயில் அமைக்கப்பட்ட இருபத்து ஐந்தாவது ஆண்டு விழாவின்போது அந்த வருடம் முழுதும் கோடி துளசி தள அர்ச்சனை சகஸ்ர ரஜத கலசாபிஷேகம் (ஆயிரம், வெள்ளிக் கலசங்களால் அபிஷேகம்) அஷ்டாட்சர மகா மந்திர யாகம், ஸ்ரீ மஹாவிஷ்ணு விஷ்வஸாந்தி யாகம் ஆகிய அனைத்தும் நடத்தப்பட்டன.
கோடைக்கால விடுமுறையின்போது இந்தியாவிலிருந்து அழைக்கப்பட்ட ஆசிரியர்கள் மூலம் வாய்ப்பாட்டு, இசை, நாட்டியம் என்று குழந்தைகளுக்கு வகுப்புகள் நடத்துகிறார்கள். சீமந்தம்.. உபநயனம்.. திருமணம் போன்ற. இல்லத்து விழாக்களுக்கு கோயிலின் உள்ளேயே மண்டபம் இருக்கிறது.
குழந்தைகளுக்காக பாலவிஹார் வகுப்புகளும் யோகா பயிற்சி முகாம்களும் வருடம் முழுதும் நடத்தப்படுகின்றன . கோயிலில் நூலகம் ஒன்றும் இருக்கிறது. ஆன்மிகப் புத்தகங்கள் ஏராளமாக உள்ளன.
திருப்பதி பெருமாள் பலருக்கு இஷ்ட தெய்வமாகவும் குல தெய்வமாகவும் இருப்பதால்.. அமெரிக்கா வாழ் இந்தியர்கள் பலர் அவரை தரிசிக்கத் துடிக்கிறார்கள். அவர்களுக்கு இவர் பெரிய ஆறுதல்.
பின்குறிப்பு: பல தமிழ் தெலுங்கு சினிமாக்களில் இந்தக்கோயில் காட்டப்பட்டு விட்டது.
உதாரணம்: ஆனந்த தாண்டவம்