பெங்களூர்:
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமான அதிகாரிகள், வங்கி மேலாளர் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி ரெய்டு நடத்தி வருகிறது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமான அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி மேலாளர் உட்பட சிலரது வீடுகளில் வருமான வரித்துறை இன்று அதிரடி சோதனை நடத்தியுள்ளது.
ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை மோடி கடந்த 8ந் தேதி வெளியிட்ட பிறகு கருப்பு பண முதலைகள், தங்களுக்கு வேண்டியவர்கள் மூலமாக பினாமி பெயர்களில் வங்கிகளில் டெபாசிட் செய்து வருவது அதிகரித்துள்ளது.
பணக்காரங்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் தனியார் வங்கி மேலாளர்களை தன்வசப்படுத்தி, தங்களுக்கு தேவையான பணத்தை கருப்பு, வெள்ளையாக மாற்றி வருகின்றனர்.
இதையடுத்து பெங்களூரில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தி வருகினறனர்.
ஐஏஎஸ் அதிகாரி மோகன் சக்கரவர்த்தி, தனலட்சுமி வங்கியின் மேலாளர் உமா சங்கர், காவிரி வாரிய தலைமை இன்ஜினியர் சிக்கராயப்பா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனைகள் நடைபெற்றன.
இதில் சிக்கராயப்பா, முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமானவர். அவரது வீட்டில் கருப்பு பணம் இருக்கலாம் என்ற தகவலின்பேரில் ரெய்டு நடந்துள்ளது.
இந்த ரெய்டின்போது முக்கிய ஆவணங்கள் சில பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடக முதல்வரான சித்தராமையாவுக்கு வேண்டியவர்கள் வீட்டில் ரெய்டு நடந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.