அம்மா உஷா,  பீப் சிம்பு, அப்பா டி.ஆர்.
அம்மா உஷா, பீப் சிம்பு, அப்பா டி.ஆர்.

 

பாச பீ்ப் பாடல் பற்றி, சிம்புவின் தந்தை டி.ராஜந்தர், தனது குறள் வெப் டி.வியில் தோன்றி தன்னிலை விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து அதே வெப் டிவியில் சிம்புவின் தன்னிலை விளக்கமும் ஒளிபரப்பாகி உள்ளது. அது இணையத்தில் உலா வருகிறது.  அதில், “விளையாட்டாக பாடிய பாடல் அது, எல்லோரும் எதிர்த்தாலும் என்னை ஆதரிக்கும் இந்த குடும்பத்தில் பிறக்க நான்  கொடுத்துவைத்திருக்கவேண்டும்” என்று சிம்பு தெரிவித்திருக்கிறார்.

அந்த வீடியோ பதிவில் சிம்பு கூறியிருப்பதாவது:

“இந்த பீப் பாடல் எந்த திரைப் படத்திலும் வரவில்லை, டிவி ரேடியோவில் ஒலிபரப்பாகவில்லை. பிறகு என்னிடம் கேள்வி கேட்பது ஏன்?

இது என் பாடல் தான். இதற்கும் அனிருத்துக்கும் சம்மந்தம் இல்லை. அவரை இழுக்க வேண்டாம். எல்லாவற்றையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். ஒரு படமோ பாடலோ நான் அதிகாரப்பூர்வமா வெளியிடப்படும் போது நீங்கள் என்னை கேள்வி கேட்க முடியும்.

நான் எனது வீட்டில் காதல் தோல்வி பாடல், ஹீரோ அறிமுகப் பாடல், கடவுளை வாழ்த்தும் பாடல், நண்பர்களுக்கான பாடல் என பல வகை பாடல்களை இசையமைத்துப் பாடியுள்ளேன். தமிழ் சினிமா பாடல் கம்போஸிங்கில் டம்மியான வரிகள் போட்டு பாடும் வழக்கம் எப்போதும் உண்டு. அந்தப் பாடல் கடைசியாக மக்களிடம் சேரும்போது என்ன வடிவத்தில் இருக்க வேண்டும் என்பது எனக்கு தெரியும்.

இதில் எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் பொதுவாக காதல் தோல்வி பாடல்கள் எல்லாம் பெண்களை திட்டித்தான் இருக்கும். ஆனால் என் பாடலில் அப்படி இருக்கக் கூடாது என்பதால் தான் பெண்களை திட்ட வேண்டாம், உன்னை நீயே திட்டிக்கோ என்றுதான் எழுதி இருக்கிறேன். பெண்களை திட்ட வேண்டாம் என்பதே என் பீப் பாடலின் கரு.

சென்சாரில் சின்ன கெட்ட வார்த்தைகளை கூட நீக்கிவிடுவார்கள். அதை மனதில் வைத்து தான் இதில் பீப் பயன்படுத்தினேன். அது வேடிக்கையாகத் தான் முயற்சி செய்தேனே தவிர அது இறுதியான யோசனை அல்ல. நான் விளையாட்டாக வீட்டில் வைத்திருந்ததை எடுத்து யாரோ பொதுவெளியில் விட்டதற்கு என்னை கேள்வி கேட்கலாமா? சமைத்துக் கொண்டிருக்கும் உணவை திருடிவிட்டு நன்றாக இல்லை என சொல்வது போல இருக்கிறது. சமைத்து முடித்தவுடன் தானே அசல் சுவை தெரியும்?

தங்கை இலக்கியா, தம்பி குறளரசனுடன் பீப் சிம்பு
தங்கை இலக்கியா, தம்பி குறளரசனுடன் பீப் சிம்பு

 

இந்தப் பாடல் குழந்தைகளைப் போய் சேர்கிறது என சொல்லாதீர்கள். டிவியில் வந்தால் தான் குழந்தைகளிடம் சென்றடையும். இணையத்தில் ஆபாச தளங்கள் கூடத்தான் இருக்கின்றன. அவை குழந்தைகளை சென்றடையாதா? என் பாடல் மட்டும்தான் குழந்தைகளிடம் போய் சேருமா?

பெண்ணை அடி, உதை என சொல்லும் பாடல்களை யாரும் கேள்வி கேட்பதே இல்லை. ஆனால் தாடி வளர்க்காத, தண்ணி அடிக்க வேண்டாம் என்று நான் பாடும் பாடலுக்கு மட்டும் எதிர்ப்பு வருகிறது. பெண்களுக்கு ஆதரவான பாடலை எதிர்ப்பது கஷ்டமாக இருக்கிறது. எனக்கு பெண் ரசிகைகள் தான் அதிகம். இதை தேவையில்லாமல் திரித்துவிட்டு சிம்பு என்ற தனிமனிதக்கு எதிராக திருப்பிவிட்டிருக்கிறார்கள்.

இனிமேல் என் இமேஜ் கெட்டுப்போக ஒன்றுமில்லை. ஏற்கனவே நிறைய காயப்படுத்திவிட்டார்கள். அதையும் மீறி நான் இன்று உங்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன். அதற்குக் காரணம் கூட என் பெண் ரசிகைகள்தான். அவர்களின் ஆதரவு தான்.

எனக்கு சினிமா மட்டும் தான். சட்டரீதியான விஷயங்கள் எதுவும் தெரியாது. எனது நலம் விரும்பிகள், என்னை ஆதரிப்பவர்கள் சட்டரீதியான உதவி செய்கிறார்கள். வக்கீல் வைத்து என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து வருகிறேன்.

என்னை ஆதரிக்கும் இப்படி ஒரு குடும்பத்தை பெற நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். கவிஞர்களின் கூட்டறிக்கையை நான் மதிக்கிறேன். அவர்களது தனிப்பட்ட கருத்துகளை மதிக்கிறேன். ஆனால் அதிகாரப்பூர்வமாக நான் வெளியிடாத ஒரு பாடலை விமர்சனம் செய்வதில் நியாயம் இல்லை என்பதை மட்டும் சொல்லிவிட விரும்புகிறேன். நான் தவறு செய்தால் முதல் ஆளாக மன்னிப்பு கேட்பேன்.

மக்கள் மழையால பாதிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் யாராவது விளம்பரத்துக்காக இப்படி ஒரு காரியத்தை செய்வார்களா? என் வீட்டுக்கு வெளியே தண்ணீர் தேங்கி, இணையம், போன் என எதுவும் வேலை செய்யாமல் நானும் கஷ்டத்தில்தான் இருந்தேன். இப்படி ஒரு சூழலில் நான் ஏன் விளம்பரம் தேட வேண்டும்? நான் 30 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். என்னை தமிழ்நாட்டில் யாருக்குமே தெரியாதா? இந்த மாதிரி ஒரு பாடல் வெளியிட்டுத்தான் விளம்பரம் தேட வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை.

பலாத்கார வழக்கில் சிக்கியவன் விடுதலையாகிறான். ஆனால் நான் செய்யாத தவறுக்கு அந்தப் பாட்டைக் கூட சரியாக கேட்காமல் உருவ பொம்மை எரிப்பு என போராட்டம் செய்வது ஏன் என்று புரியவில்லை. தமிழ் சினிமாவில் யாருமே எனக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. கூட இருந்தவர்கள் கூட ஆதரவிக்கவில்லை. ஆனால் தமிழ் மக்கள் என்னை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது.

தவறு செய்தால் அதை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்கும் பக்குவம் எனக்கு இருக்கிறது. ஓடி ஒளிய மாட்டேன். இனி இதை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு கவலையில்லை. எனது நிலைப்பாட்டை நான் தெரிவித்துவிட்டேன்” இவ்வாறு அந்த வீடியோ பதிவில் சிம்பு தெரிவித்துள்ளார்.