smart city

டில்லி:

ஸ்மார்ட் சிட்டி திட்ட அறிக்கை சமர்ப்பிக்காமல் தமிழக அரசு அலட்சியமாக இருந்ததால் தமிழகத்தின் 12 நகரங்களுக்கு வரவேண்டிய மத்திய அரசின் நிதி கிடைக்கவில்லை.

நாடு முழுவதும் 98 நகரங்களை ஸ்மார்ட் சிட்டிக்கு தேர்வு செய்து மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, வேலூர், சேலம், திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய 12 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிக்கு தேர்வாகின.

ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் தொடர்பான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும்படி அனைத்து மாநிலங்களையும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகம் கேட்டது. இதனால் அனைத்து மாநிலங்களும் தங்கள் நகரங்களுக்கு வசதி வாய்ப்பு வரும் இந்த விசயத்தில் மிகுந்த அக்கறை செலுத்தி உடனடியாக திட்ட அறிக்கை சமர்ப்பித்தன.

அதவாது, மொத்தம் 85 நகரங்களுக்கான ஸ்மார்ட் சிட்டி திட்ட அறிக்கை நகர்ப்புற வளர்ச்சித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் வழக்கம் போல தமிழகத்தில் இதற்கான முயற்சி ஏதும் உரிய காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த செவ்வாய்க்கிழமைதான் (டிச.15) ஸ்மார்ட் சிட்டி திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்.

அடுத்த ஐந்தாண்டுகளுக்கான ரூ.2 லட்சம் கோடி மதிப்பீட்டிலான திட்ட அறிக்கை இதுவாகும். திடுமென விழித்துக்கொண்ட தமிழக அரசு, வெள்ளப் பாதிப்பை காரணம்  காட்டி, அறிக்கை சமர்ப்பிக்க கூடுதல் கால அவகாசம் கேட்டிருக்கிறது. இதனால் தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாநிலங்கள் சமர்ப்பித்துள்ள ஸ்மார்ட் சிட்டி திட்ட மதிப்பீட்டு அறிக்கைகளை பரிசீலித்து முடிவெடுக்க சில மாதங்கள் ஆகும். இனியாவது விரைந்து செயல்பட்டு தமிழக அரசு திட்ட அறிக்கையை அனுப்பும் என எதிர்பார்க்கிறோம். இதிலும் தாமதமானால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் பயனை தமிழகம் அடைய முடியாது’ என்றார்.

“தமிழக அரசின் எல்லா செயல்பாடுகிளிலும் “நான், எனது” என்று குறிப்பிட்டுக்கொள்ளும் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் இதற்கும் பொறுப்பேற்க வேண்டும்” என்று ஆதங்கத்துடன் சொல்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.