hqdefault

சென்னை:

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எதிர்க்கட்சியான தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கூட்டணி குறித்து குழப்பான கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

விரைவில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வர இருக்கிறது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த வியூகங்களை அமைத்து வருகின்றன.

இதில் ம.தி.மு.க, இரு கம்யூ, விடுதலை சிறுத்தை ஆகியவை மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் அணி சேர்ந்திருக்கினறன. தி.மு.க. உள்ளிட்ட  மற்ற கட்சிகளும் மறைமுகமாக கூட்டணி குறித்த முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன.

இந்த கட்சிகள், கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் தே.மு.தி.கவை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இருக்கின்றன. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் தேமுதிக கூட்டணி வைத்ததால், தங்கள் அணியில் தேமுதிக இருப்பதாக பாஜக கூறிவருகிறது. ஆனால் தேமுதிக தலைவர் விஜயகாந்தோ, “அவங்கதான் அப்படிச்சொல்றாங்க” என்று பஞ்ச் கொடுத்தார்.

இதற்கிடையே தி.மு.க. தலைவர் கருணாநிதியும்  தே.மு.திகவுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் விஜகாந்தும் அவர் மனைவி பிரேமலதாவும் திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். அதோடு அதிமுகவையும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

மக்கள் நலக்கூட்டணியும் தே.மு.திகவை அழைக்கிறது. ஆனல் அதற்கு விஜயகாந்த் தெளிவான பதிலைத் தரவில்லை.

அதே நேரம், “தி.மு.க. – அ.தி.மு.க. கட்சிகளை தோற்கடிக்க எந்த தியாகத்தைச் செய்யவும் தயார்” என்றார் விஜயகாந்த்.

இந்த நிலையில் ஆங்கில நாளேட்டுக்கு அளித்துள்ள பேட்டியில், “மக்கள் நலக் கூட்டணியின் செயல்பாடு சிறப்பாக இருக்கிறது” என்று பாராட்டி இருக்கிறார். ஆனாலும் , ” நாங்கள் இன்னும் கூட்டணியை முடிவு செய்யவில்லை” என்றும் கூறியிருக்கிறார்.

மேலும், “தே.மு.தி.க. தனித்தும் கூட போட்டியிடக்கூடும்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

அதோடு,”திமுக, அதிமுகவுக்கு மாற்றாக நாங்கள் இருப்போம்” என்றும் தெரிவித்திருக்கிறார்.

ஆகவே அவரது கருத்து என்ன என்பது புரியாத நிலை நிலவுகிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போதும், தேர்தல் நெருங்கும் வரை தனது முடிவை இழுத்தடித்ததும், அத் தேர்தலில்  தே.மு.தி.க.  போட்டியிட்ட அனைத்து தொகுதியிலும் தோல்வி அடைந்ததும் குறிப்பிடத்தக்கது.