3

 

சென்னை:

சென்னை பகுதியில் பெரும் வெள்ளம் ஏற்பட்டதற்குக் காரணம், முன் திட்டம் இன்றி செம்பரம்பாக்கம் ஏரியை திறந்துவிட்டதுதான் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெவலப்மெண்ட் ஸ்டடீஸைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் இது குறித்து விரிவாகக் கூறியிருக்கிறார்.

அவர் சொல்லியிருப்பதாவது:

“செம்பரம்பாக்கம் ஏரியை அரசு தனியான ஒரு நீர்த்தேக்கமாக மட்டும் கருதி நீரைத் திறந்துவிட்டது. இது தவறு. அந்த ஏரி அடையாறு ஆற்றோடு மட்டுமின்றி மேலும் சுமார் 200 நீர்நிலைகளோடு தொடர்புடையது.

அதனால்தான் விநாடிக்கு 33,500 கன அடி நீரை செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிட்டாலும் கூட, அந்நீர் சைதாப்பேட்டையை அடையாறு வழியாக அடையும்போது 60,000 கன அடியாக பெருக்கெடுத்து ஓடுகிறது. நிர்வாகத்தினருக்கு இந்த இயல்பான
நிகழ்வு தெரியவில்லை. அதன் விளைவை மக்கள் அனுபவிக்கிறார்கள்.

வரும் காலத்தில் இது போன்ற பெரும் வெள்ளப்பெருக்கை தடுக்க ஒரு வழி இருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் மட்டும் ஏரி, குளம், ஆறு என்று உத்தேசமாக 3,600 நீர்நிலைகள் உள்ளன. இவற்றை ஒன்றோடு ஒன்று (நதிநீர் இணைப்பு மாதிரி) இணைத்துவிட்டால் தோராயமாக 30 ஆயிரம் மில்லியன் கன அடி நீரை இவற்றில் தேக்க முடியும்.
மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெள்ளம் வராமலும் தடுக்க முடியும்” என்று பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் கூறியிருக்கிறார்.