12279154_164664133885290_8612643555591030079_n

கலைஞர் நகர் காமராஜர் சாலையில் இருக்கும் அந்த பிரியாணி கடையின் பெயரே வித்தியாசமாய் இருக்கிறது.. “கவிஞர் கிச்சன்”!

பக்கத்திலேயே இருக்கும் அறிவிப்புகளும் நம்மை ஈர்க்கின்றன: “தமிழ்ப்படம் பார்த்துவிட்டு டிக்கெட் காண்பிப்பவர்களுக்கு பத்து சதவிகிதம் தள்ளுபடி!” “திரைப்பட உதவி இயக்குநர்களுக்கு இலவச சாப்பாடு”!

இந்தகடையை நடத்தும் கவிஞர் ஜெயங்கொண்டானிடம் பேசினோம்:

“எனக்கு சொந்த ஊர் ஜெயங்கொண்டம் பக்கத்துல இருக்கிற  இடையார் ஏந்தல். அப்பா அம்மா இரண்டு பேரும் விவசாயக்கூலிகள். இரண்டு அண்ணன், அக்காக்களுக்கு பிறகு நான் கடைக்குட்டி.

சின்ன வயசிலிருந்தே தமிழ் மேல ஈடுபாடு. திரைப்படங்களுக்கு பாடல் எழுதணும்னு ஆசை.

ப்ளஸ்டூ முடிச்ச உடனே சென்னைக்கு பஸ் ஏறிட்டேன். பாடல் எழுதற வாய்ப்பு எளிதா கிடைச்சுரும்ணு நினைச்சு சினிமா கம்பெனிகள்ல போயி வாய்ப்பு கேட்டேன். அப்பத்தான் தெரிஞ்சுது, வாய்ப்பு கிடைக்கிறது அத்தனை சுலபம் இல்லேன்னு!

12188967_156085814743122_1623467019236422653_n

ஏவி.எம். ஸ்டுடியோல வாட்ச்மேன் வேலைக்கு கேட்டேன். அங்க வேலை பார்த்தா, டைரக்ட்ர், இசை அமைப்பாளர்களை பார்க்கலாம்.. அப்படியே வாய்ப்பு கேட்கலாம்னு ஐடியா! ஆனால, உயரம் குறைவா இருக்கறதா சொல்லி அந்த வேலையும் கிடைக்கல!

பசி ஒருபக்கம், தங்க இடம் இல்லாத நிலை மறுபக்கம்.. அதனால  சாலிகிராமத்துல ஒரு ஓட்டல்ல வேலைக்குச் சேர்ந்தேன். அங்க வந்த திரைப்பட எடிட்டர் ஒருத்தர்கிட்ட வாய்ப்பு கேட்டேன். அவரு, “இன்னும் நீ நிறைய படிக்கணும்”னு சொன்னாரு.

அதனால் ஓட்டல்ல வேலை பார்த்துகிட்டே, நந்தனம் ஆர்ட்ஸ் காலேஜில பி.ஏ. தமிழ் இலக்கியம் மாலை நேர வகுப்புல சேர்ந்தேன்.

காலையில மூணு மணிக்கு எந்திருச்சி கோயம்பேடு மார்க்கெட்ல வேலை செய்வேன். வந்து ஓட்டல் வேலை. அதுக்கப்புறம் கல்லூரி. இரவு மறுபடி ஓட்டல் வேலை.

அப்பல்லாம் ஒரு நாளைக்கு மூணு மணி நேரம்தான் தூங்குவேன். அப்படி ஒரு உழைப்பு.

பி.ஏ. படிச்சு முடிச்சேன். இடையில வேறு ஒரு ஓட்டல்ல வேலக்குச் சேர்ந்தேன். பிறகு கடையை நானே எடுத்து நடத்தற சூழ்நிலை வந்துச்சு..” என்ற ஜெயம்கொண்டானிடம், கடையில் இருக்கும் வித்தியாசமான அறிவிப்புகள் பற்றி கேட்டோம்.

அதற்கு அவர், “சினிமா தாகத்தோட சென்னைக்கு வர்ற பல பேருக்கு உடனடியா வேலை கிடைச்சிடுறது இல்லே. எனக்கும் அப்படிப்பட்ட அனுபவம் கிடைச்சிருக்கு. அதனாலதான் கஷ்டப்படற உதவி இயக்குநர்கள், இங்கே இலவசமா சாப்பிடலாம்னு அறிவிப்பு வச்சேன். யூனியன் கார்டை காண்பிச்சி இங்கே இலவசமா சாப்பிட்டுக்கலாம்.

12295283_166741580344212_5274671375799451102_n

அதே மாதிரி, தமிழ்ப்படங்களை பார்த்துட்டு வர்றவங்க டிக்கெட்டை காண்பிச்சா பத்து பர்சண்ட் தள்ளுபடி!” என்கிறார் இந்த சினிமா காதலர்.

இயக்குநர் பார்த்திபன், பேரசு, அமீர் நடிகர்கள் சூரி, அப்புகுட்டி, கஞ்சா கருப்பு என பல சினிமா வி.ஐ.பிக்கள் இவரது கடையின் கஸ்டமர்கள்.

“பெரிய கடையா வைக்க, உதவி செய்யறதா கஞ்சா கருப்பு சொல்லியிருக்காரு. இடம் பார்த்துகிட்டு இருக்கேன்” என்கிறார் மகிழ்ச்சியுடன் ஜெயங்கொண்டான்.

அது மட்டுமல்ல… இவரைப்பற்றி கேள்விப்பட்ட விஜயகாந்த், எண்பது லட்ச முதலீட்டில் கடை துவங்குவதாக கூறியிருக்கிறாராம். அடுத்தகட்டமாக அதை செயல்படுத்த இருக்கிறார் ஜெயங்கொண்டான்!

11986430_796242890519923_288930317479227782_n

 

கடையால், தனது லட்சியத்தையும் தொய்வடைய விடவில்லை இவர். இதுவரை 15 நேரடி தமிழ்ப்படங்களுக்கும், 20 டப்பிங் படங்களுக்கும் பாடல் எழுதிவிட்டார். தற்போதும் சில படங்களுக்கு எழுதி வருகிறார்!

தனது முன்னேற்றம் பற்றி மட்டும் யோசிக்காமல், பிறரது லட்சியத்துக்கும் உதவும் ஜெயங்கொண்டான், பெரு வெற்றி அடைய வாழ்த்துவோம்!