ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாண்டிபோரா என்ற இடத்தில் ஊடுருவிய தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் அவரது உடல்களை பரிசோதித்த போது மத்திய அரசு புதிதாக வெளியிட்ட 2000 ரூபாய் நோட்டுக்களைக் கண்டு ராணுவத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இவர்கள் கையில் எப்படி புதிய நோட்டு கிடைத்தது என்ற நோக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மல்புரா என்ற இடத்தில் உள்ள ஒரு வங்கியில் நுழைந்த முகமூடி அணிந்த நான்கு மர்ம ஆசாமிகள் அங்கிருந்து 13 லட்சம் மதிப்புடைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை திருடிச் சென்றனர். கடந்த அக்டோபர் 25-இல் குல்கம் என்ற இடத்தில் இன்னொரு வங்கிக் கொள்ளையில் மூன்று முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 2.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.
பாகிஸ்தான் இந்திய பொருளாதாரத்தை முடக்கும் நோக்கத்துடன் நேர்த்தியாக அச்சிடப்பட்ட இந்திய கள்ளநோட்டுக்களை இந்தியாவுக்குள் புழக்கத்தில் விட முயற்சித்ததை தடுக்கும் நோக்கிலும் பண முதலைகளிடம் தேங்கியிருக்கும் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டுவரும் நோக்கிலும் இந்திய அரசு சமீபத்தில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.