வரும் நவம்பர் 14-ஆம் தேதி வரை மின்சாரக் கட்டணம், குடிநீருக்கான கட்டணம் போன்ற அத்தியாவசிய பில்களை செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, 1000 நோட்டுக்களை வைத்து செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
notes
ஏற்கனவே அரசு மருத்துவமனைகள், அரசு மருந்தகங்கள், இரயில்வே மற்றும் விமான பயணச்சீட்டு பதிவகங்கள், பால் பூத்கள், நீதி மன்றங்களில் கட்டப்பட வேண்டிய கட்டணங்கள், மற்றும் கோ-ஆப்பரேட்டிவ் அங்காடிகள் ஆகிய இடங்களில் நவம்பர் 11-ஆம் தேதி நள்ளிரவு வரை பழைய நோட்டுக்கள் மறுக்காமல் பெற்றுக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த சலுகை காலம் நவம்பர் 14 வரை இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்பரேடிவ் அங்காடிகளுக்கு சென்று பழைய நோட்டுக்களை கொடுத்து பொருட்கள் வாங்க விரும்புவோர் அடையாள அட்டைகளை கண்டிப்பாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
நாடு முழுவது வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் ரூபாய் நோட்டுக்கள் இல்லாமல் பலர் ஏமாற்றத்தோடு திரும்புகின்றனர். இச்சூழலில் மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி சுங்கச்சாவடிகளில் நவம்பர் 14 வரை வரிகள் வசூலிக்கப்படாது என்று அறிவித்துள்ளார்.