கொழும்பு:
அண்மையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் நடத்திய தாக்குதலில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக சிங்கள ஊடகங்கள் வதந்தியை பரப்பி வருகின்றன. இவற்றில் முதன்மையாக இருப்பது திவயின என்கிற இதழாகும்.
இந்த இதழில் வெளியான செய்தியாவது:
“பிரான்ஸ் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்ட பாணி விடுதலைப் புலிகள் பயன்படுத்திய தொழில்நுட்பம் போலவே உள்ளது.
இதன் காரணமாக இக்குண்டுவெடிப்பு சம்பவத்துடன் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என்று இன்டர்போல் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது விடுதலைப் புலிகளின் குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் அனைவரும் ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் சென்றனர். . அவர்களில் ஒருவரைக் கூட பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்ய முடியவில்லை.
அப்படி தப்பிச் சென்ற தர்மராஜன் என்பவரை அண்மையில் பாரிஸ் நகரில் வைத்து இன்டர்போல் போலீசார் கைது செய்தனர். அதுவரையில் அவர் அங்கிருந்தது பாரிஸ் போலீசாருக்கு தெரியவில்லை.
எனவே பிரான்ஸ் குண்டு வெடிப்பு சம்பவத்தில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும், குர்திஷ் கெரில்லாக்களுக்கும் தொடர்பு இருக்கலாம் ம் என்று இன்டர்போல் போலீசார் சந்தேகம் தெரிவிக்கிறார்கள்” என்று அந்த இதழ் தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை அரசியல் நோக்கர்கள் கூறுவதாவது:
“தீவிர சிங்கள இனவாத இதழான திவயின முன்பு ராஜபக்சேவுக்கு ஆதரவாக இருந்தது. தற்போது, இப்போதைய அதிபர் ஸ்ரீசேனவுக்கு ஆதரவாக இருக்கிறது.
எப்போதும் ஈழத் தமிழர்க்கு எதிரான செய்திகளை தொடர்ந்து எழுதிவரும் இதழ் இது.
2009ம் ஆண்டு, போரில் விடுதலைப்புலிகள் முற்றாக அழிக்கப்பட்டனர் என்று இலங்கை அரசு அறிவித்தது. அதற்குப் பிறகு 2010ம் ஆண்டு இந்த இதழ், “மகிந்த ராஜபக்சே, அவர் தம்பிகள் கோத்தபாய மற்றும் பசில் ராஜபக்சே உள்ளிட்டோர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தக் கூடும்” என்று ஒரு பொய்ச் செய்தியை வெளியிட்டது.
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, “2009ம் ஆண்டு போரில் கொல்லப்பட்டவர்களை நினைவு கூர தேசிய தினம் அறிவிக்கப்பட வேண்டும்” என்று கோரினார். இதை இலங்கை அரசு நிராகரித்தது.
அதே வேளையில், “விடுதலைப்புலிகளை நினைவு கூர நவநீதம்பிள்ளை கோரியதாக இந்த இதழ் திரித்து செய்தி வெளியிட்டது.
அதே போல, இன்டர்போல் போலீசார் கூறாத கருத்தை, கூறியதுபோல தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் இருந்து உயிர் பிழைத்துச் சென்ற பலர், பிரான்ஸில் அடைக்கலமாகியுள்ளனர். அவர்களுக்கு துன்பம் விளைவிக்கும் நோக்கத்தில் இதுபோன்ற செய்திகளை சிங்கள ஊடகங்கள் சில வெளியிடுகின்றன. இது போன்ற வதந்திகளை பிரான்ஸ் அரசோ, இன்டர்போல் போலீசாரோ பொருட்படுத்தமாட்டார்கள்” என்று கூறினர்.