பொலிடிகல் பொக்கிஷம்: 4:
எங்க கணேசு!
சிவாஜி கணேசனின் தாயார் இராஜாமணி அம்மையார், 53 வருடங்களுக்கு முன்பு, ‘குமுதம்’ 12.12.1963 இதழில் ‘எங்க கணேசு’ பேட்டி கட்டுரையில் சொல்கிறார்.
” கணேசு ஒவ்வொரு நாடகக் கம்பெனியிலும் ரொம்பக் கஷ்டப்பட்டான். யதார்த்தம் பொன்னுசாமி கம்பெனியில் அவன் பொள்ளாச்சியில் இருக்கிறப்போ நான் போய்ப் பார்த்தேன். உமி, தவிடு போக்காத அரிசியை வடிச்சுப் போட்டு, கணேசும் அவனையொத்த பசங்களும் திண்கின்ற கண்றாவியைப் பார்த்து என் பெத்த வயிறு பத்தி எரிஞ்சுது,
எம்.ஆர்.ராதா கம்பெனியிலே அவன் இருந்தப்போ, கொல்லங்கோட்டிலே (கேரளா) அவனையும்,
மற்ற பசங்களையும் ‘அம்போன்னு விட்டுட்டு சொல்லாமே, கொள்ளாமே போயிட்டாரு, ராதா!
சக்தி நாடக சபையிலே அவன் இருக்கும்போது, சக்தி கிருஷ்ணசாமி (நாடகக் கம்பெனி உரிமையார்) சினிமாவுக்கு வசனம் எழுதறதா சொல்லிட்டுப் பட்டணம் போயிட்டார். கணேசு மலையிலே கல் உடைச்சும், வீட்டுக்கு வீடு அரிசி வாங்கியும் திண்டாடிக்கிட்டிருந்தான். நான்போய் கூட்டியாந்தேன்!”
பெரியார் பார்த்த மலேசியா!
பெரியார் ஈ.வெ.ரா. 1929 டிசம்பரில் மலேசியா நாட்டிற்கு அரசியல் சுற்றுப்பயணம் செய்து, அங்கு பல பொதுக்கூட்டங்களில் பேசிவிட்டுத் திரும்பினார். நாடு திரும்பியதும் 07.02.1930 அன்றைய ‘குடியரசு’ இதழ் தலையங்கத்தில் அவர் எழுதியது:
“பினாங்கில் இறங்கியவுடன் பலவிதமான விஷயங்கள் காதுக்கு வந்தன. அவற்றுள் ஒன்று நம்மைக் கத்தியால் குத்துவதற்கு ஒரு நபருக்கு 500 ‘வெள்ளி’ பேசி ஏற்பாடு செய்திருப்பதாகவும் நான் போகும் இடங்களிலெல்லாம் கலகம் செய்வதற்கும், துண்டுப் பிரசுரங்கள் போட்டு வழங்கி வருவதற்கும் நூறு வெள்ளி பேசி, பலரை நியமித்து இருப்பதாகவும் மற்றும் கிறிஸ்துவுக்கு விரோதமாய் பேசினதாகவும், முகம்மது நபிக்கு விரோதமாய் பேசினதாகவும், இந்து மதத்தை ஒழித்து இந்துக்களை முகமதிய மதத்தில் சேர்ப்பிக்க முகமதியரிடம் பணம் வாங்கிக் கொண்டு மலாய் நாட்டிற்கு வருவதாவும், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு விரோதமாய் ஒத்துழையாமைப் பிராச்சாரம் செய்ய வருவதாவும், இன்னும் பலவிதமாகத் துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் பத்திரிகை மூலமாகவும் பிரசாரம் செய்திருந்த விஷயம் நேரில் பார்த்தோம்.
தவிரவும் அவ்விடத்தில் ஒரு ஆங்கில தினசரிப் பத்திரிகை அரசாங்கத்திற்கும், சட்டசபை அங்கத்தினர்களுக்கும் நான் பெரிய கோபக்காரன் என்றும் ஜன சமூகத்தின் சாந்த குணம் கெட்டு சர்ககாருக்குத் தொல்லை ஏற்படுமென்றும் எச்சரிக்கை செய்வதாக வாரம் தவறாமல் தலையங்கமும் துணைத் தலையங்கமும் எழுதி வந்தது.
இது நிற்க. ‘ தமிழ் நேசன்’ பத்திரிக்கைக்காரரான ஒரு அய்யங்கார் ஊர் ஊராகச் சுற்றிப் பிரசாரம் செய்துடன் தனது பத்திரிகையில் கடவுளுக்கும், மதத்துக்கும் ஆபத்து என்று தினசரி எழுதிக் கொண்டே வந்தார். ‘ தோட்டக் கூலிகளைக் கிளப்பி விட்டு தோட்டக்காரருக்குத் தொல்லை விளைவிப்பான்’ என்றும் சொல்லி வந்தார்களாம்!
வேர்கள் வெளியே தெரிவதில்லை
ஐதராபாத்தில் ஒருமுறை அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகாலத்தில் தலைவர்களாக இருந்த 70 பேருடைய உருவப்படங்களை வைக்க
விரும்பினார்கள். 69 பேரின் படங்கள் கிடைத்தன. ஒருவருடைய புகைப்படம் எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.
அவர்தான், காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்த அதன் முதல் தலைவர் ஆலன் ஆக்டேவியன் ஹூயூம்! அவரது படம் இல்லாமலேயே மாநாடு நடந்து முடிந்தது. (இவரது புகைபடம் தற்போது இணையத் தளத்தில் கிடைக்கிறது.)
செந்தமிழ் நாடென்னும் போதினிலே!
‘இந்தியா – 100 இயர்ஸ் அகோ!’ (இந்தியா 100 ஆண்டுகளுக்கு முன்பு) என்றொரு ஆங்கில நூல், சமீபத்தில் படிக்கக் கிடைத்தது. வெள்ளைக்காரர்கள் நம் நாட்டை ஆண்ட போது எழுதப்பட்ட நூலில் மறுபதிப்பு இது. இங்கிலாந்திலிருந்து வரும் ஆங்கிலேயே அதிகாரிகளுக்கு இந்தியாவை அறிமுகப்படுத்த வேண்டி இந்த நூலை சென்னையிலிருந்து அப்போது வெளியிட்டுள்ளனர். அதில் தமிழ்நாட்டைப் பற்றி ஏதேனும் சுவாரஸ்யம் கிடைக்குமா என்று ஆவலாகப் புரட்டினேன். அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீர்கள். சென்னைப் பட்டிணத்தைப் பற்றி அதில் படிக்க நேர்ந்தது.
1876-78ம் வருட காலகட்டத்தில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின்போது ஒன்பதாயிரம் பேர் சென்னையில் இறந்தனர். மக்கள், கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டனர். ஒரு நாளைக்கு முப்பது பேர் வீதம் மாண்டனர். இறந்தவர்களை ஒன்றாகப் போட்டு எரித்தனர். இது ‘கான்ட்ராக்ட்’ முறையில் செய்யப்பட்டது. அவ்வருட பஞ்சத்தின் பயங்கரங்கள் சொல்ல முடியாதவை. சொல்லக் கூடாதவை.
தானிய மூட்டைகளை துறைமுகத்திலிருந்து இரயில் நிலையத்திற்கு எடுத்துச் செல்லும்போது , பலத்த இராணுவப் பாதுகாப்பு வேண்டியிருந்தது. ஆனால் பசியின் வசப்பட்டவர்கள் சவுக்கடிகளையும் , குதிரையின் குளம்படிகளையும் மீறி மூட்டைகளில் ஓட்டைப் போட்டுத் தானியங்களைச் சிந்தச் செய்தனர். பின்னர், நூற்றுக்கணக்கான மக்கள் கீழே சிதறிய தானியங்களைப் பொறுக்கினர்.
இதற்கு தண்டனையாக, பிடிப்பட்டவர்களை எல்லாம் கடற்கரையில் உள்ள கொட்டடிகளில் உணவோ, நீரோ இல்லாமல் கொதிக்கும் வெயிலில் இருபத்து நான்கு மணி நேரமும் அடைத்து வைத்தனர். இவ்விதம் பலர் அழிந்தனர்.
ஆங்கிலேயே அதிகாரத்தின், படோடோபத்தின் தலைமையிடமான சென்னையில்தான் இந்தக் கொடுமை நிகழ்ந்தது. இதையெல்லாம் நேரில் கண்ட அரசு பணியாளர் ஒருவர் அப்போது சொன்னது: “நாய்க்கும் கழுகுகளும் இல்லாவிட்டால், பிணங்களை அடக்கம் செய்ய நாங்கள் ரொம்ப கஷ்டப்பட்டிருப்போம்!”
(அடுத்த அத்தியாயம், வரும் வெள்ளிக்கிழமை அன்று)
கட்டுரையாளர் தொடர்பு எண்: 9790752183