பாகிஸ்தான் கலைஞர்களை பாலிவுட்டில் பயன்படுத்தக்கூடாது, அப்படி பயன்படுத்த விரும்பும் தயாரிப்பாளர்கள் இராணுவ நிதிக்கு ரூ.5 கோடியை கொடுத்துவிட்டு பின்னர் படமெடுக்கட்டும் என்று ராஜ்தாக்கரே தெரிவித்திருந்த கருத்துக்கு முன்னாள் இராணுவ அதிகாரிகள் கடும் கண்டணம் தெரிவித்திருக்கின்றனர்.
முன்னாள் இராணுவ அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் பி.எஸ்.ஜஸ்வால் கொஞ்சம் கடுமையாகவே ராஜ்தாக்கரேயை சாடியிருக்கிறார். “இந்திய ராணுவம் ஒன்றும் நிதிக்காக பிச்சையெடுத்துக் கொண்டு இருக்கவில்லை. இதுபோன்ற கட்டாயப்படுத்தி கொடுக்கும் நிதிகளை வாங்க வேண்டிய அவசியமும் இராணுவத்துக்கு இல்லை என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர், அரசு இதில் தலையிட்டு தேவையில்லாமல் அரசியல்வாதிகள் இராணுவத்தை இழுப்பதை கண்டிக்க வேண்டும். இராணுவத்துக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை, அது அரசியலுடன் எப்போதும் தொடர்பில்லாமலேயே இருக்க விரும்புகிறது என்று தெரிவித்திருக்கிறார்.
கார்கில் போரின் ஹீரோவான பிரிகேடியர் குஷல் தாகூர் (ஓய்வு), “இராணுவம் அரசியல்வாதிகளால் அவமானப்படுத்தப்படுகிறது. இராணுவத்துக்கு 5 கோடி நிதி கொடுக்கச்சொல்லி ஒருவரை கட்டாயப்படுத்துவது எப்படி சரியாகும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய ராணுவம் சமீபத்தில் போரில் காயமடைந்த வீரர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்களின் நலநிதிக்கான ஒரு அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேசப்பற்றுள்ள பல தனிப்பட்ட மக்களும், இராணுவத்தினர் நலனில் அக்கறையுள்ள நிறுவனங்களும் தானாக முன்வந்து அந்த அமைப்புக்கு நிதி அளித்து வருகின்றார்கள்.
கடந்த அக்டோபர் 17-ஆம் தேதிதான் பாதுகாப்பு அமைச்சகம் இந்த நலநிதிக்கு நன்கொடை தர விரும்புகிறவர்கள் தானாக விரும்பி முன்வந்து தந்தால் போதும் என்று அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முந்தைய செய்தி:
பாக். நடிகர்களை பயன்படுத்தும் தயாரிப்பாளர்கள் இராணுவ நிதிக்கு ரூ.5 கோடி தர வேண்டும்: ராஜ் தாக்கரே