பாலிவுட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கபட்ட, கரன் ஜோஹரின் கனவு திரைப்படமான “ஏ தில் ஹே முஷ்கில்” திரைப்படம் தீபாவளிக்கு வெளிவராது என்று தெரிகிறது. அத்திரைப்படத்தில் பாகிஸ்தான் நடிகர் ஃபவாத் கான் நடித்திருப்பதால் இத்திரைப்படத்தை திரையிட வேண்டாம் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்திருக்கிறது.

fawad

மும்பை திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிதின் ததார் இது பற்றி தெரிவித்த போது, பாகிஸ்தான் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், இயக்குனர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் பங்கேற்றிருக்கும் படங்களை நாட்டு நலன் மற்றும் தேசப்பற்றை மனதில் கொண்டு வெளியிட வேண்டாம். இருநாடுகளுக்கும் நிலைமைகள் சீராகும்போது அவற்றை வெளியிடுவதில் பிரச்சனைகள் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
“ஏ தில் ஹே முஷ்கில்” திரைப்படம் வெளியாவதற்கு மகாராஷ்டிரா, குஜராத் கோவா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு விட்டது. இது மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்தப்படவேண்டும்.
பாகிஸ்தான் நடிகை மஹிராகான் நடித்த “ராயீஸ்” திரைப்படம் பற்றி கேட்கப்பட்டபோது, அப்படம் இன்னும் ரிலீசுக்கு வரவில்லை வரும்போது இருக்கும் நிலைமைகளை கருத்தில் கொண்டு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.