இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எல்லையில் போர் பதற்றம் நிலவிவரும் வேளையில் ராணுவம் எங்கே நிறுத்தப்பட்டிருக்கிறது? என்ன பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது போன்ற தகவல்களை பாகிஸ்தான் உளவுத்துறையிடம் வெளியிட்ட போலீஸ் டி.எஸ்.பி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் தன்வீர் அகமது என்பவருக்கும், டிஎஸ்பிக்கும் பாகிஸ்தானிலிருந்து அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் வருவதை கண்டறிந்த உள்துறை அமைச்சகம் ஜம்மு-காஷ்மீர் டிஜிபியை தொடர்புகொண்டு இதை விசாரிக்கும்படி உத்தரவிட்டது.
தன்வீர் அகமதை விசாரித்தபோது தனக்கு ஒரு மாதத்துக்கு முன்பாக ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் ஒரு ராணுவ கமாண்டர் எனவும் பாரா-மிலிட்டரி படைகள் எங்கு நிறுத்தப்பட்டுள்ளார்கள் என்பது போன்ற தகவல்களை விசாரித்ததாகவும் அதற்கு தான் தனது உயரதிகாரியின் உத்தரவின்றி இது போன்ற தகவல்களை தர முடியாதென்றும் கூறியதாகவும் கூறினார்.
ஆனால் அத்தகவல்கள் பின்னர் டி.எஸ்.பியால் வாட்ஸ்சாப் மூலம் பரிமாறப்பட்டது தெரியவந்தது. பின்னர் அந்த டி.எஸ்.பி சஸ்பண்ட் செய்யப்பட்டார்,
காவல் துறை அதிகாரிகளுக்கு பாகிஸ்தானில் இருந்து அவ்வப்போது இப்படிப்பட்ட அழைப்பு வருவது வழக்கம். எதிர்முனையில் பேசுபவர்கள் இந்திய ராணுவ அதிகாரி என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு ராணுவம் எங்கு நிறுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவல்களை கேட்பார்கள். அது போன்ற அழைப்புகளை மிகவும் எச்சரிக்கையுடன் கையாளவேண்டும் என்று உளவுத்துறை தெரிவித்திருக்கிறது.