கோவா,
பிரிக்ஸ் உச்சி மாநாடு நாளை கோவாவில் தொடங்கப்படுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிரான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, சீன அதிபர் க்சி ஜின்பிங்  மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இன்று கோவா வருகின்றனர்.
இந்த உச்சிமாநாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக கூட்டு நடவடிக்கை எடுப்பது பற்றி முடிவு செய்யப்படும் என புதின் தெரிவித்துள்ளார்.

பிரசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து பிரிக்ஸ் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.  இதன் உச்சிமாநாடு கோவாவில் நாளை நடைபெறவுள்ளது.
இதில் கலந்துகொள்வதற்காக சீன அதிபர் Xi Jinping மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் இன்று கோவா வருகின்றனர். முன்னதாக, கோவா புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேரிய திரு.புதின், இந்த உச்சிமாநாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக கூட்டு நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
மேலும் போதை பொருள் கடத்தல், லஞ்ச ஊழல் ஆகிய தீமைகளை எதிர்த்து போராடுவது குறித்தும் இம்மாநாட்டில் கருத்து ஒற்றுமை ஏற்படும் என புதின் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே மாநாட்டில் கலந்துகொள்ளும் பிரதமர் நரேந்திரமோடி, ரஷ்ய அதிபர் புதினையும், சீன அதிபர் க்சி ஜின்பிங் ஐயும்  சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். அப்போது அவர், பாகிஸ்தான், இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை ஊக்குவித்து வருவது குறித்து விளக்கமாக எடுத்துக்கூறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும்  சீன அதிபர், இந்கதிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்,  பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா ரஷ்யா இடையே நாளை 18 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது.  ரூபாய் 33,000 கோடிக்கு அதி நவீன ஏவுகணைகளை ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகிறது.
இதற்கிடையில், ரஷ்யாவும், பாகிஸ்தானும் இணைந்து கூட்டு போர் பயிற்சி செய்தது குறிப்பிடத்தக்கது.