டில்லி,
இந்தியன் ரெயில்வேக்கு சொந்தமாக மகாராஜா சொகுசு ரெயிலில் திருமணம் மற்றும் விழா நிகழ்ச்சிகள் நடத்த ரூ.5.5 கோடி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவது என்பார்கள். வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே வரும் தருணம் என்பதால் திருமணத்தை ஆடம்பரமாகவும், வித்தியாசமாகவும் நடத்திட பலரும் விரும்புகின்றனர்.
வசதி படைத்தவர்கள் கடலுக்கு அடியில் திருமணம் செய்வது, கப்பலில் திருமணம் செய்வது, ஆகாயத்தில் பறந்து திருமணம் செய்வது உள்ளிட்ட பல்வேறு முறைகளில் உலகம் முழுவதும் பெரும்பாலோனோர் திருமணம் செய்து கொள்கின்றனர்.
இந்நிலையில் சுற்றுலா போல திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்தும் திட்டமொன்றை ஐ.ஆர்.சி.டி.சி. அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஐஆர்சிடிசியின் ஐ.ஆர்.சி.டி.சி.யின் மேற்கு மண்டல செய்தி தொடர்பாளர் பினாகின் மோரவாலா கூறியதாவது:
இந்தியாவின் ஆடம்பர சொகுசு ரெயிலான மகாராஜாவை எட்டு நாட்கள் திருமணச் சுற்றுலாவிற்காக முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த ரெயிலில் 88 பேர் பயணம் செய்ய முடியும்.
24 பெட்டிகள் கொண்ட இந்த ரெயிலில், 43 விருந்தினர் அறைகள் உள்ளன.
இதில் 20 டீலக்ஸ், 18 ஜூனியர் சூட்கள், 4 சூட்கள் மற்றும் ஒரு பிரசிடென்சியல் சூட் உள்ளிட்டவையும் அடங்கும்.
இந்த எட்டு நாட்கள் திருமண சுற்றுலாவிற்கு மொத்தம் 5.5 கோடி ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருமணம் தவிர பாலிவுட் சினிமா சூட்டிங், பேஷன் நிகழ்ச்சிகள், கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மகாராஜா ரெயிலில் நடத்திக் கொள்ளும் வசதியையும் அறிமுகம் செய்ய ஐ.ஆர்.சி.டி.சி. முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.