மதவெறியூட்டும்படியாக, இஸ்லாமியர்களுக்கு எதிராக வாட்ஸ்அப்பில் பதிவிட்ட ஆர்.எஸ்.எஸ். பேச்சாளர் மீது நடவடிக்கை எடுத்த போலீசார் பழிவாங்கப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலம் பாலகாட் நகரை சேர்ந்தவர் சுரேஷ்யாதவ். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த இவர், இஸ்லாமியர் குறித்து மதவெறியை ஊட்டும் வாசகங்களை வாட்சாப்பில் பகிர்ந்தார். இதையடுத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சுரேஷ் யாதவ் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் கிட்டதட்ட 600 பேர் பாலகாட் காவல்நிலையத்தை சூழ்ந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். கைது நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரி ஜியா உல் ஹக் உள்ளிட்ட எட்டு காவலர்கள், உயிருக்கு பயந்து காவல் நிலையத்திலேயே ஒரு தனி அறையில் போய் பதுங்கிக் கொண்டனர். கூட்டம் குறையாமல் வன்முறை அதிகரித்த வண்ணம் இருந்தது.
இதற்கிடையே சுரேஷ்யாதவுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் அதிகாலை 3.00 மணியளவில் அங்கு வந்த எஸ்.பி அசித் யாதவ் வன்முறை கும்பலை ஒடுக்குவதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ் பேச்சாளர் சுரேஷ் யாதவ் கொடுத்த புகாரின் பேரில் தனது சொந்த டிப்பார்ட்மெண்டை சேர்ந்த அதிகாரி உள்ளிட்ட 8 போலீஸ் கான்ஸ்டபிள்கள் மீது கொலை முயற்சி உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளுடன் கூடிய எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார்.
அதற்குப் பிறகு தங்களுக்கு தங்கள் சொந்த துறையை சேர்ந்த அதிகாரிகள் உட்பட யாருமே எந்த உதவியும் செய்யவில்லை என்றும், இங்கு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துக்கு எதிராக பேச யாருக்குமே துணிவில்லை என்றும் பாதிக்கப்பட்ட அந்த போலீசார் தங்கள் கவலையையும் பயத்தையும் தெரிவித்துள்ளனர்.
இச்செய்தி இப்போது வட இந்திய மீடியாக்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
நன்றி: SHAHNAWAZ MALIK (http://www.catchnews.com)