திருவனந்தபுரம் :
கேரளாவில் பா.ஜ., தொண்டர் கொல்லப்பட்டதை கண்டித்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இதனையடுத்து தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
கேரளாவில் பாரதியஜனதா தொண்டர்களுக்கும், கம்யூனிஸ்டு கட்சி தொண்டர்களுக்கும் அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இரு கட்சியினரும் ஒருவரை மாற்றி ஒருவர் கொலை செய்யப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கேரளாவில் நடைபெற்று வரும் அரசியல் கொலைகள் அம்மாநிலத்தில் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் பா.ஜ., தொண்டர் ரெமித் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல்வர் பிரனாய் விஜயனின் சொந்த ஊரில் நடைபெற்ற இக்கொலையில் கண்டித்து முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாதவாறு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கேரளாவில் பாரதிய -ஜனதா கட்சி விடுத்த அழைப்பின் பேரில் நடைபெற்று வரும் முழு அடைப்பு போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேரளாவில் பெரும்பாலான ஊர்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தலைநகர் திருவனந்தபுரத்தில் பேருந்துகளும் இயங்கவில்லை.
இதனால் ரயிலில் வந்திறங்கிய பயணிகள் சொந்த இடங்களுக்கு செல்ல சிரமப்பட்டனர். போலீசார் அவர்களை காவல்துறை வாகனங்களில் ஏற்றி இருப்பிடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் பேருந்துகள் எல்லையில் நிறுத்தப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்ற பேருந்துகள் எல்லை வரை இயக்கப்படுவதால் கூலி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோன்று கோவையில் இருந்து கேரளாவிற்கு வழக்கம் போல செல்லும் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. கேரளாவில் கடை அடைப்பு போராட்டம் என்பதை அறியாமல் உக்கடம் பேருந்து நிலையத்திற்கு வந்த பயணிகள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
கேரளாவிற்கு பேருந்துகள் இயக்கப்படாததால் திருவனந்தபுரம் செல்லும் பயணிகள் ரயிலில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.