நியூஸ்பாண்ட்:
தமிழக முதல்வர் ஜெயலலிதா நீண்ட நாட்களாக மருத்துவமனையல் சிகிச்சை பெற்றவரும் நிலையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
உடல் நலக்குறைவு காரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 18 நாட்கள் ஆகின்றன. . அவரது உடல்நிலையில் முன்னேற்றம் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை அளித்தாலும் மேலும் பல நாட்கள் சிகிச்சை தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் பொருளாளர் ஸ்டாலினும் அரசு நிர்வாகம் செயல் இழந்துள்ளதால் புதிய முதல்வரை தேர்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். அரசு நிர்வாகம் செயல் இழந்து நிற்கிறது என்று திருமாவளவன் உட்பட மேலும் சில தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கவர்னர் ஆட்சியை அமல்படுத்த ஆளும் மத்திய பாஜக ஆட்சி முயல்வதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.
இந்த குழப்பமான சூழலை பயன்படுத்தி, அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கணிசமானோரை இழுத்து ஆட்சி அமைக்க தி.மு.க. முயல்வதாகவும் ஒரு யூகச் செய்தி உலாவருகிறது. இதற்காக அதிமுகவுக்கு சமீப காலத்தில் வேண்டாமல் போய்விட்ட பிரபல சேனல் அதிபர்கள் இருவர் களமிறக்கி விடப்பட்டுள்ளதாகவும் அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
இந்த நிலையில் பல வருடங்களாக ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் அனுமதி மறுக்கபப்ட்ட (சசிகலா) நடராஜன், கடந்த சில நாட்களுக்கு முன் அங்கே மீண்டும் வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து அவர் பலரிடமும் ரகசிய ஆலோசனை செய்துவருகிறார். அதில் முக்கியமானவர் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் என்றும் சொல்லப்படுகிறது.
தற்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நடராஜனின் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த எம்.எல்.ஏக்கள் தங்கள் சொந்த தொகுதியில் இருக்க வேண்டும் அல்லது வெளியூர் சென்றால் முன்னதாகவே தகவல் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்களாம்.
ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்களை (அமைச்சர்கள் தவிர்த்து) மூன்று குழுவாக பிரித்து, வெளி மாநில டூர் அழைத்துச் செல்லவும் திட்டமிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.