“சசிகலாவோ, நடராஜனோ முதல்வர் ஆகிறதைவிட, வைகோ ஆனால் நல்லதுனனு சிலபேரு நினைக்கிறாங்களாம். அப்படி ஒரு மூவ், நெடுமாறன் மூலமா நடந்துகிட்டிருக்காம்! வைகோவும் யோசிக்கிறேனு சொல்லியிருக்காராம்!”
– மூத்த அரசியல் பிரமுகர் ஒருவர் என்னிடம் சொல்ல.. நான் சிரித்தேன்.
அதற்கு அவர், “ சிரிக்காதீர்கள்! ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உட்பட ஆகப்பெரும்பாலான முதல்வர்கள் நமக்கு “திடுமென” கிடைத்தவர்கள்தான்.  அவர்கள் முதல்வர் ஆவதற்கு முன் யாரேனும் இப்படிச் சொல்லியிருந்தால் மக்கள் சிரித்துத்தான் இருப்பார்கள். ஆனாலும் அப்படித்தான் நடந்தது.
th
அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதால், எந்த யூகத்தையும் ஒதுக்குவது அறிவுடமை அல்ல” என்றார்.
மேலும் அவர், “சசிகலா மீதும் வழக்கு இருக்கிறது. அவரது கணவர் நடராஜன் வெளிப்படையான அரசியலுக்கு சரிவர மாட்டார். அவரும் அதை விரும்பவில்லை. அ.தி.மு.விலேலேய இருக்கும் மூத்த தலைவர்கள் பண்ருட்டி ராமச்சந்திரனும், பொன்னையனும்தான். ஆனால் எம்.எல்.ஏ.க்களை கட்டுப்படுத்தி ஒருங்கிணைக்கும் பலம் இல்லாதவர்கள்.
ஆனால் வைகோ திறமையான நிர்வாகி. டில்லி தொடர்புகள் உள்ளவர். க்ளீன் இமேஜூம் இருக்கிறது. ஆகவே வைகோவை தேர்ந்தெடுத்தார்களாம்!” என்றார் அந்த மூத்த அரசியல் பிரமுகர்.
“நீங்கள் சொல்வது சரி என்றே வைத்துக்கொள்வோம். இதற்கு வைகோ எப்படி ஒப்புக்கொள்வார்” என்றேன்.
“ஜெயலலிதா மருத்துமனையில் இருக்கும் சூழலை வைத்து, அதிமுக எம்.எல்.ஏக்களில் கணிசமானோரை வளைத்து,  ஆட்சியைப் பிடிக்க தி.மு.க. திட்டமிடுகிறது. அப்படி நடந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருப்பவர்களில் வைகோவும் ஒருவர். ஆகவே அவர் ஒப்புக்கொள்வதில் வியப்பேதும் இல்லையே” என்றார்.
“சரி.. ம.தி.மு.க. கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் எப்படி அ.தி.மு.க. சார்பாக முதல்வர் ஆக முடியும்.” என்றேன்.
அதற்கு அவர்,  “அரசியலில் லாஜிக் என்பதெல்லாம் கிடையாது” என்றார் லாஜிக்காக.
நான், “மக்கள் தேர்ந்தெடுக்கும் ஜனநாயகநாட்டில் இப்படி ஆட்சியாளர் குறி்த்த வதந்திகள் அல்லது யூகச் செய்திகள் பரவுகின்றனவே” என்றேன் வருத்தத்தோடு.
அதற்கு அவர், “ஜனநாயக ஆட்சி என்பதன் முக்கிய அடையாளம் வெளிப்படைத் தன்மை. ஆனால் நமது ஜனநாயகம் என்பதே மிக ரகசியமானது. குறிப்பிட்ட தொகுதியில் யாரை வேட்பாளராக்குவார்கள் என்பதை அந்த கட்சியின் தலைமை பெரும்பாலும் ரகசியமாகவே வைத்திருக்கும். யாருடன் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எப்படி என்பதையும் கட்சித் தொண்டர்களுக்குக்குத் தெரியாமல் ரகசியமாகவே வைத்திருப்பார்கள் தலைவர்கள். ஒருவேளை, தலைவருக்கு நெருக்கமான – அரசியலுக்கு அப்பாற்பட்ட – சக்திகளுக்கு மட்டுமே அனைத்து ரகசியங்களும் தெரியும். இப்படி ரகசியமாகவே நடக்கும் ஜனநாயக அமைப்பில், யூகச்செய்திகள், வதந்திகள் பரவுவதை தடுக்கவே முடியாது!” என்றார்.
நிஜம். அரசியல் தலைவர்கள், அரசியல் மாறாதவரை இப்படி வதந்திகள் பரவுவது நிற்காது!