யுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நேற்று இனிதே நிறைவடைந்ததை ஒட்டி இன்றைக்கு விஜயதசமி.
தசமி என்றால் பத்து. விஜயம் என்றால் வெற்றி, வாகை, வருகை என்று பல பொருள்கள் உண்டு
இது ஏன் எதற்காக எப்படிக் கொண்டாடப்படுகிறது?
முதல் நாளன்று நாம் பார்த்ததைச் சற்றே நினைவு கூர்ந்தால் நன்றாய் இருக்கும் நண்பர்களே. தேவி மகிஷாசுரனை வதம் செய்த கதை உங்களுக்கெல்லாம் புதிதல்ல. அப்போது எல்லா தெய்வங்களும் தங்கள் தங்கள் ஆயுதங்களை தேவியிடம் தந்ததையும் இதன் காரணமாக அவர்கள் சக்தியிழந்து பொம்மைகளாக நின்றுவிட்டதையும் பார்த்தோம்.
1
வதம் முடிந்து அந்த ஆயுதங்களைத் திருப்பிக் கொடுத்த நாள்தான் இன்றைய விஜயதசமி.
இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்று மூன்று சக்தி அவதாரங்கள் எடுத்த அன்னை இறுதியில் எல்லாம் கலந்த மகாசக்தியாகத் தோன்றி, மகிஷாசுரனை, சும்ப, நிசும்பனை , சண்ட முண்டனை வதம் செய்த நன்னாள் விஜயதசமி. இன்று ஸ்ரீ அன்னையை வழிபட அனைத்து நன்மைகளும் பெருகும். வாழ்வில் எல்லா வளங்களும் கிடைக்கும்.
ஆயுதங்களின் நிஜமான உபயோகங்கள் என்ன என்பைதையே நமக்கு உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. உயிர்ப்பொருள்கள், உயிரற்ற பொருட்கள் அனைத்திலும் இறைவன் உறைந்திருக்கிறான்.  வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்கள் நம் தெய்வங்களே அன்றோ?
ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப் பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.  இதன் மூலம் அவற்றிற்கு உரிய மரியதை கொடுப்பது மட்,டுமின்றி அவற்றின் சிறப்பை ஒருநாளாவது நினைத்து பிரமிப்போம் அல்லவா?
ஆயுத பூஜையன்று எல்லா ஆக்கப்பூர்வமான காரியங்களுக்கு மட்டுமே இந்த உபகரணங்கள், ஆயுதங்களை பயன்படுத்துவோம், மற்ற அழிவு செய்கைகளுக்கு பயன்படுத்தமாட்டோம் என்று உறுதி எடுத்துக் கொள்வோமே.
2
ஒன்பது நாட்கள் மன ஒருமைப்பாட்டுடன் சிரத்தையாக நவராத்திரி கொண்டாடியதற்கு மகிழ்ந்து நம் வீட்டு அந்த அம்பாளே விஜயம் செய்வதாலும் விஜயதசமி எனலாம்.
அன்றுதான் ராவணனை  ஸ்ரீ ராமன் வென்றார். பாண்டவர்கள் தங்களது போரின் வெற்றிக்கு நன்றி கூறும் விதமாக அன்னை எனும் மகாசக்திக்கு, தாங்கள் போரிட்ட ஆயுதங்களை முன் வைத்து வழிபாடு செய்த புனித தினமும் இதுதான்.
ஸ்ரீ சீரடி சாய்பாபா இந்த நன்னாளில்தான் மகாசமாதி அடைந்தார்.
விஜயதசமியை வன்னி நவராத்திரி, வனதுர்க்கா நவராத்திரி என்றும் அழைப்பர். மகா நோன்பு என்று தேவி மாகாத்மியத்தில் குறிப்பிடப்படுவதும் இதையே தான். எருமை வடிவம் கொண்ட மகிஷனோடு ஒன்பது இரவுகள் யுத்தம் செய்து கொற்றவையாக அவன் தலையை கொய்து விஜயையாக அம்பிகை நின்ற நாள் விஜயதசமி.
முந்தைய நாள் அடுக்கி வைத்த புத்தகங்களை மீண்டும் பூஜித்து நைவேத்தியம், தீபாராதனை எல்லாம் ஆனபின் பக்தியோடு சிலவரிகளாவது படித்தால் கல்வி அபிவிருத்தி அடையும் என்பது நம்பிக்கை.
விஜயதசமி தினத்தன்று சிவன்கோவில்களில் பரிவேட்டை உற்சவம்னு ஒன்று நடைபெறுகிறது. இறைவன் எழுந்தருளி வன்னிமரத்தில் அம்பு போடுவது வழக்கம். வன்னி மரம் மனித உடலாகக் கருதப்படுகிறது. இந்த மரத்தில் இறைவன் அம்பு போடுவது நமக்கு ஞான உபதேசம் செய்வதையே இது உட்பொருளாக உணர்த்துகிறது.
 
இன்று மறுபூஜை செய்து தொழில் தொடங்கினால் அந்த வருடம் முழுவதும் தொழில் நிலை சிறப்படைந்து நன்றாக செல்வச் செழிப்பு உண்டாகும். தசமி திதியும் திருஓணம் நட்சத்திரமும் சேர்ந்து வருவது மிகவும் விசேஷம் இந்த வருடம் அந்த சிறப்பு நிகழ்கிறது. ஏதேனும் ஒரு புதிய செயலை இன்று துவக்குவது சிறப்பு.
3இந்த நன்னாளில் வெற்றித் திருமகளாகப் பத்துத் திருக்கரங்களுடன் துர்க்கா லட்சுமி சரஸ்வதி ஐக்கிய ரூபமாக வருகிறாள். கதை, வில், வாள், சங்கு, சக்கரம், சூலம், அக்ஷமாலை, பாசம், அங்குசம், உணவுக்கலையம் ஆகியவற்றைக் கைகளில் தாங்கி வருவாள். நமக்கு உழைப்பின் பலனையும் நித்தியப்படி உணவையும் தருபவள். ஞானேஸ்வரியாக வந்து ஞானத்தினை அருள்பவள். பச்சை ஒளியாக வந்து சக்தி அளிப்பவள். சஹஸ்ராரத்தைக் காட்டுபவள்.
அனைத்து வகைப் பூக்களும் கொண்டு இன்று இவளை அர்ச்சிக்கலாம், அனைத்து வகைப் பழங்களும் இன்று இவளுக்கு நைவேத்தியம். சுண்டல் வறுவல் திரட்டுப் பால் ஆகியவற்றை மகிழ்வுடன் ஏற்பாள்.
இன்று யாருக்காவது சாப்பாடு போட்டால் மிகுந்த நன்மை அடையலாம். இன்று மாலை 6 மணிக்குப் பிறகு கலசத்தை எடுக்கலாம். பொம்மைகளைச் சாய்த்து வைக்கலாம்,
இன்றைக்கு அவள் மயில்கழுத்து நிறத்தில் புடவை அணிந்து வருவாள். சிவந்த நிறத்தில் மாலை அணிந்து வருவாள்.
இன்று அவள் பாஷா ரூபிணி. எனில் அவள்  மொழிகளைக் கற்றுக் கொடுப்பவள். யோசிக்கவைத்த அவற்றை மனதில் ஒலிவடிவாக்கி வாயில் பேச்சாக வரவழைப்பவள்.
இன்றைக்கு நாம் சந்தன நிறத்தில் உடை அணிந்து அவளைப் பூஜிக்க வேண்டும்.
சரி நண்பர்களே..  தோழியரே…
பத்து நாட்கள் தொடர்ந்து நான் உங்களை தினமும் சந்தித்து அளவளாவிவிட்டு இன்றைக்கு விடைபெறும்போது சற்று வெறிச்சென்று உணர்கிறேன். எனினும் பத்திரிகை டாட்காம் எனக்கு வேறு சந்தர்ப்பங்கள் அளிக்கும்போது மீண்டும் சந்தித்து மகிழ்வோம் என்ற நம்பிக்கையுடன் கிளம்புகிறேன். சென்று வென்று வருகிறேன்.