சென்னை:
தமிழகம் முழுதும் மீண்டும் கடும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
“கேரளா அருகே நேற்று நிலை கொண்டு இருந்த மேலடுக்கு சுழற்சியானது மேற்கு நோக்கி நகர்ந்தது. அது இன்று காலை முதல் தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு இருக்கிறது.
இதன் காரணமாக 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். அதில் தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்யும். வட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மழை எதிர்பார்க்கலாம். பல இடங்களில் மழை அதிகமாக இருக்கும்.
இதற்கிடையே ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு நிலை தெற்கு அந்தமான் கடற்பகுதியில் உருவாகி இருக்கிறது.
இது வருகிற 14–ந் தேதி (சனிக்கிழமை) தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மீண்டும் பலத்த மழை பெய்யும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், செய்யூர் ஆகிய இடங்களில் 10 செ.மீ. மழை பெய்திருக்கிறது.
அரக்கோணம் 9 செ.மீ., மதுராந்தகம் 8 செ.மீ., சென்னை விமான நிலையம், நத்தம், திருவையாறு, ஒட்டன்சத்திரம், தலா 7 செ.மீ., தாம்பரம், நுங்கம்பாக்கம், அண்ணா பல்கலைக்கழகம், அன்னூர், செங்கல்பட்டு, பழனி தலா 6 செ.மீ., கொளப்பாக்கம் 5 செ.மீ., பூந்தமல்லி, மரக்காணம், உத்திரமேரூர், தாமரைபாக்கம், செம்பரம்பாக்கம், தலை4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.”
- இவ்வாறு ரமணன் கூறினார்.
1