பெங்களூரு,
வீரப்பனை ஒழித்தவர் தமிழக முதல்வர் ஜெயலலிதா.. அவரது படத்தை நான் எரித்திருக்கக்கூடாது என்றும், அவர் நலம்பெற வேண்டி பிரார்த்தனை செய்வதாக கன்னட சாலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் கூறி உள்ளார்.
தமிழகத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடக மாநிலம் முழுவதும் வன்முறை போராட்டங்கள் நடைபெற்று வந்தன.
வாட்டாள் நாகராஜ் தலைமையில் அவரது தொண்டர்கள் வாகனங்களுக்கு தீ வைப்பு மற்றும் முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படங்களை தீயிட்டு கொளுத்தினர். அவரது உருவ பொம்மை உருவாக்கி நடு ரோட்டில் தீ வைத்து எரித்தனர். கழுதையின் கழுத்தில் ஜெயலலிதாவின் படங்களை மாட்டி விட்டனர். இதுபோன்ற பல போராட்டங்கள் தமிழக முதல்வரை எதிர்த்து நடத்தினர்.
தற்போது முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் இல்லாமல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 15 நாட்களாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார்.
இதுகுறித்து, பெங்களுரில் வாட்டாள் நாகராஜிடம், நிருபர்கள் கேட்டதற்கு,
நான் அப்படி செய்திருக்கக்கூடாது. அவரது படங்களை எரித்து தப்பு பண்ணிவிட்டேன்…
வீரப்பனை ஒழித்தவர் ஜெயலலிதா…
தற்போது உடல்நலமின்றி இருக்கும் ஜெயலலிதா விரைவில் நலம் பெற பிரார்த்தனை செய்கிறேன்
என்று கண்ணீர் மல்க கூறினார்.