ஐதராபாத்:
ரோகித் வெமுலா விரக்தியால்தான் தற்கொலை செய்துகொண்டார் என்று விசாரணை நீதிபதி அறிக்கை கொடுத்துள்ளார்.
ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ரோகித் வெமுலா என்ற தலித் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக பாராளுமன்றம் ஸ்தம்பித்தது.
நாடுமுழுவதும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியலைகளை உருவாக்கியது. இதன் காரணமாக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.
ஐதராபாத் பல்கலைக்கழக நிர்வாகம் ரோகித்தை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து, அவர் தற்கொலை தேடிக்கொண்டார் எனவும் இந்த சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்று மத்திய மந்திரிகள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிரிதி இரானி ஆகியோர் பதவி விலக கோரியும் போராட்டம் நடைபெற்றது.
ரோகித் தற்கொலை செய்வதற்கு முன்னதாக பல்கலைக்கழக தலைவருக்கு எழுதிய கடிதம் வெளியானது. அதில் “மாணவர்கள் சேர்க்கைக்காக பல்கலைக்கழகத்திற்கு வரும் போதே, நீங்கள் அம்பேத்கரை படிப்பதாக இருந்தால் இதை உபயோகியுங்கள் என்ற வழிகாட்டுதலுடன் தயவு செய்து 10 மில்லி கிராம் சோடியம் அசைட்டை (கொடிய விஷம்) கொடுத்து விடுங்கள்.
இதேபோல் கல்லூரி விடுதியில் தங்கும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் உற்ற துணையான தலைமை வார்டனிடமிருந்து நல்ல தாம்புக்கயிறையும் கொடுத்து விடுங்கள்” என்று மிகுந்த மன வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், தானும் தன்னுடைய நண்பர்களும் ஏற்கனவே தலித் சுயமரியாதை இயக்கத்தில் உறுப்பினர்களாக இருப்பதாகவும் அவ்வளவு எளிதாக அதிலிருந்து வெளியேற இயலாதென்றும் தெரிவித்துள்ள அவர், “மேன்மை பொருந்தியவரே, தயவு செய்து என்னைப் போன்ற மாணவர்களைக் கருணைக் கொலை செய்து விடுங்கள்” என்றும் வேதனை பொங்க கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேபோல் தற்கொலை செய்துகொண்ட ரோகித் வெமுலாவின் இறுதி காரியங்கள் அவருடைய கிராமமான உப்பலில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், யாருக்கும் தெரியாமல் மிக ரகசியமாக அம்பேர்பேட் பகுதியில் வைத்து ரோகித்தின் பெற்றோரை கூட அழைக்காமல் தகனம் செய்துவிட்டனர்.
இதனால் பிரச்சினை பெரிதானது. அதையடுத்து மத்தியஅரசு ரோகித் வெமுதா தற்கொலை குறித்து விசாரணை நடத்த முன்னாள் நீதிபதி அசோக் குமார் ரூபன்வால் தலமையில் ஒரு நபர் விசாரணைக்கமிஷனை மத்திய மனித வள அமைச்சகம் அமைத்தது.
இந்த குழு விசாரணை நடத்தி 41 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மத்திய மனித வள அமைச்சகத்திடம் அளித்துள்ளது.
அந்த அறிக்கையில், ”ரோகித் வெமுலாவின் தாயார் ராதிகா, சலுகைகள் பெறுவதற்காகவே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்ற சான்றிதழ் பெற்றுள்ளார்.
ஆவணங்களின்படி ராதிகா வடேரா சமுதாயத்தை சேர்ந்தவர். எனவே ராதிகா மற்றும் ரோகித் வெமுலாவிற்கு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என வழங்கப்பட்ட சான்றிதழ் உண்மையாக இருக்கும் என்பதில் சந்தேகம் உள்ளது.
வெமுலா தற்கொலைக்கு பின்னணியில் அரசியல் அழுத்தமில்லை.
வெமுலா எழுதி வைத்த கடிதத்தில் அவரது தனிப்பட்ட கருத்துகள் கூறப்பட்டுள்ளது. தனிப்பட்ட காரணங்களினால் விரக்தியினால் இருந்தது கடிதத்தில் தெரியவந்துள்ளது.
தனது கடிதத்தில் யாரையும் வெமுலா குற்றம்சாட்டவில்லை.
பல்கலைக்கழகம் மீது கோபமிருந்திருந்தால், அவர் பற்றி ஏதேனும் குறிப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் அதனை அவர் செய்யவில்லை.
இதன் மூலம் பல்கலைகழகத்தில் நடந்த சம்பவங்கள் வெமுலா தற்கொலைக்கு காரணமல்ல. தனிப்பட்ட விரக்தியே காரணமாக இருக்கலாம் என தெரிகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.