தோட்டத்தில் அவரைக்கொடி போட்டிருக்கிறோம். அது கம்பிலே ஏறிக் கூரையில் படர்கிறது.
காதலன் வெளியூர் கிளம்புகிறான், காதலி மேனியில் பசலை படர்கிறது.
இந்தப் ‘படர்’/’படர்தல்’ ஓர் அழகான சொல். பேச்சில் நாம் அதிகம் பயன்படுத்துவதில்லை. ‘படர்தாமரை’ என்கிற தோல்நோயின் பெயரில்மட்டும் அது தென்படுகிறது.
‘படர்தல்’ என்ற சொல்லை இன்னொருவிதமாகவும் எழுதலாம், ‘படர்கை’. அனுப்புதல், பெறுதல் என்பதை அனுப்புகை, பெறுகை என்று எழுதுகிறோமல்லவா? அதுபோலதான்.
இந்தப் ‘படர்கை’யை இரண்டு சொற்களாகப் பிரித்தால், படர்கின்ற கை என்று பொருள்வரும். காதலியின்மீது காதலன் கைகள் படர்வதாக ஒரு கிளுகிளு காட்சியைக் கற்பனை செய்துகொள்ளலாம்.
அதனிடையே ஒரு ‘க்’ சேர்த்தால், படர்க்கை. ஆங்கிலத்தில் Third Person என்று சொல்லப்படுவது, மூன்றாம் நபரை/வேறொரு பொருளைக் குறிப்பிடும் சொல்.
பள்ளியில் தமிழை ஒரு பாடமாகப் படித்தவர்கள் தன்மை, முன்னிலை, படர்க்கை என்று வாசித்திருப்பார்கள். தன்னைச்சொல்வது தன்மை (First Person), முன்னே இருக்கும் பிறரைச்சொல்வது முன்னிலை (Second Person), பிறரைச் சொல்வது படர்க்கை.
நான் வந்தேன் என்பது தன்மை, நீ வந்தாய் என்பது முன்னிலை, அவன் வந்தான், அவள் வந்தாள், ராமன் வந்தான், சீதை வந்தாள், பூனை வந்தது போன்றவை படர்க்கை.
இதனை ஒருமை, பன்மை என்றும் பிரிக்கலாம். பூனை என்பது ஒருமைப் படர்க்கை, பூனைகள் என்பது பன்மைப் படர்க்கை.
அடுத்து, வினைமுற்றைப் பார்ப்போம்.
(தொடரும்)