b
முதல் நாள்
புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் நோன்பு நவராத்திரி நோன்பு எனப்படும்.
இது தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயண காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும்.
இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் சாரதா நவராத்திரியே நவராத்திரி விரதமாக அனுசரிக்கப்படுகிறது. நவராத்திரி பூஜை புரட்டாதி மாதத்தில் அமாவாசைகழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்யப்பட வேண்டும்
சக்தியை நோக்கி அனுட்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குகின்ற சக்தியைப் போற்றும் விரதமாக நவராத்திரி விரதம் அனுட்டிக்கப்படுகிறது.
பிரளயம் ஏற்பட்டுப் பேரழிவு நேர்ந்தபோது முடிவில், இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்பினபோது இச்சை என்ற சக்தியும், அது எவ்வாறு தோன்றியது என்று அறிந்தபோது ஞானசக்தியும் தோன்றின; பின் கிரியா சக்தியினால் இறைவன் உலகைப் படைத்தான் என்ற கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது.
நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.
பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள் நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத்தேவையான பொருட்களை அமாவாசையன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூசை தொடங்கவேண்டும்.
குமாரி பூசை நவராத்திரி காலத்தில் இன்றியமையாததாகும். இரண்டு வயதிற்கு மேல் பத்து வயதிற்கு உட்பட்ட குமாரிகளே பூசைக்கு உரியவர்கள் முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு குமாரியாக முறையே குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் பூசிக்கப்படவேண்டும்.
பூசிக்கப்படும் குமாரிகள் நோயற்றவர்களாகவும் அழகுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். குமாரிகளுக்கு ஆடை, அணி, பழம், தாம்பூலம், மலர், சீப்பு, கண்ணாடி முதலிய மங்களப் பொருட்கள் மஞசள் குங்கும, தட்சணை கொடுத்து உபசரித்து அறுவகை சுவைகளுடன் அமுது செய்வித்தல் வேண்டும்
முதல் நாள் அம்பாள் இந்திராணியாக இருப்பதாக ஐதீகம். இவள் சாம்ராஜ்யம் அளிப்பவள். கிரீடமும் வஜ்ராயுதமும் தரித்தவள், இவள் மாஹேந்திரி என்றும் அழைக்கப்படும் இவள் விருத்தாசுரன் என்ற அரக்கனை அழித்தவள்.
இவளுக்கு மத்தியான வேளையில் வெண்பொங்கல் நைவேத்தியம் செய்ய வேண்டும். அவள் செவ்வரளி நிற ஆடை அணிந்திருப்பாள். நீலம் சார்ந்த நிறங்கள் அணிந்து பூஜை  செய்ய வேண்டும்.
a
மூன்று வயது பாலாவாகவும் வந்து தரித்திரங்களைப் போக்குகிறாள்.
அரிசி மாவால் பறவை வடிவில் கோலம் போட வேண்டும். தோடி ராகம் இசைக்க வேண்டும். கலசத்தினுள் நீலாயதாட்சி என்ற பெயரின் உள்ளிருப்பாள்.
உதிரி முல்லையால் அர்ச்சிக்க வேண்டும்,
வரும் பெண்களுக்கு  செண்பகம் வைத்துக் கொடுக்க வேண்டும். சுண்டல் மற்றும் திரட்டிப்பால் அளிப்பது விசேஷம்
ஆனால் நாம் பிளாஸ்டிக் குங்குமத்தையும் ஸ்டிக்கர் பொட்டையும் வைத்துக் கொடுக்கிறோம்.
ஓரளவாவது பின்பற்றப் பார்க்கலாமே தோழியரே.
(நாளை காலை, இரண்டாம் நாள் நவராத்திரி பற்றி அறிவோம்!)