புதுடெல்லி,
சிபிஐ விசாரணையில் இருந்து வந்த மத்திய அரசின் கம்பெனிகள் விவகார டைரக்டர் ஜெனரல் பி.கே. பன்சால் டெல்லியில் அவரது வீட்டில் மகனுடன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் கம்பெனிகள் விவகார டைரக்டர் ஜெனரலாக பணியாற்றி வந்தவர் பி.கே. பன்சால். இவர் ஒரு தனியார் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்துகொள்ள ரூ.9 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த சி.பி.ஐ. அதிகாரிகள் பன்சால் தங்கியிருந்த ஓட்டலில் பணம் கைமாறியபோது கையும், களவுமாக பிடித்தனர். அதனை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட கே.பி.பன்சாலுக்கு சிபிஐ நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் (22 நாட்கள்) வழங்கி உத்தரவிட்டது.
சிபிஐ விசாரணையின் பிடியில் இருந்த பி.கே.பன்சால், மகனுடன் கிழக்கு டெல்லியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் பன்சாலும், அவரது மகனும் வீட்டில் தற்கொலை செய்து கொண்டனர். பி.கே.பன்சால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதே வீட்டில் ஏற்கனவே பன்சால் மனைவி சத்யபாலா (வயது 58), மற்றும் மகள் (வயது 27) தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.