மணியம்மை - பெரியார்
ரு திருமணம், பெரும் அரசியல் புயலை உருவாக்கியது என்றால், அது பெரியார் – மணியம்மை திருமணம்தான்.
9.7.1949 அன்று திருமணம் நடந்தது. அப்போது மணியம்மைக்கு வயது 30. பெரியாருக்கு 70.
“இந்த முதிர்ந்த வயதில் இளவயது மணியம்மையுடன் திருமணம் அவசியமா” என்று கட்சிக்குள்ளேயே கேள்விகள் எழுந்தன. இதைவைத்து கட்சியில் பிளவும் ஏற்பட்டது.
இதற்கு முன்பாக, தனது திருமணம் குறித்து ராஜாஜியுடன் ஆலோசனை செய்தார் பெரியார். அரசியல் கொள்கையில் இருவரும் கடும் கருத்து வேறுபாடுகளுடன் இருந்தாலும், நெருங்கிய நண்பர்களாகவே திகழ்ந்தார்கள். அந்த அடிப்படையிலேயே ராஜாஜியுடன் ஆலோசனை செய்தார் பெரியார்.
இத்திருமணத்தை ராஜாஜி ஏற்கவில்லை. “இந்த வயசில் விவாக எண்ணம் வேண்டாம் என்பது என் அபிப்பிராயம்.” என்று கடிதமும் எழுதினார்.
அதையடுத்து, “திராவிடர் கழகத்தை அழிக்க திட்டமிட்ட ராஜாஜி, பெரியாரின் திருமணத்தை ஆதரித்தார்” என்ற புகார் எழுப்பப்பட்டது.
ராஜாஜி தனக்கு எழுதிய கடிதத்தை பெரியார் வெளியிட்டிருக்கலாம். அவருக்கு இத் திருமணத்தில் உடன்பாடில்லை. ஆகவே இயக்கத்தை பலவீனப்படுத்த இத் திருமணத்தை அவர் ஊக்குவித்தார் என்பது தவறு என்று பெரியார் சொல்லியிரக்கலாம். ஆனால் அவர் அப்படி சொல்லவில்லை.
download-1
காரணம்…
அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி, “அந்தரங்கம்” என்று குறிப்பிட்டு அக் கடிதத்தை எழுதினார்.
நண்பர், “அந்தரங்கம்” என்று குறிப்பிட்டு எழுதிய கடிதத்தை எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்த பெரியார் தயாராக இல்லை. தனது பெட்டியில் அக் கடிதத்தை பத்திரப்படுத்தி இருந்தார்.
அவரது இறப்புக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டது அக் கடிதம். “இருபெரும் தலைவர்களும் மறைந்த பின்னரும் வரலாற்று முக்கியம் வாய்ந்த இக்கடிதத்தை மூடி மறைப்பது சரியல்ல” என்ற நோக்கத்துடன் அக் கடிதம் வெளியிடப்பட்டது.

டி.கே.சி.
டி.கே.சி.

இப்படி இந்தத் திருமணம் குறித்து பெரியார் – ராஜாஜி சந்தித்தது பெரும் விவாதப் பொருளாக ஆனது அக்காலத்தில்.
அந்த சந்திப்பின்போது, பெரியார் மற்றும் ராஜாஜியுடன் இன்னொருவரும் இருந்தார் என்ற தகவல் கே.எஸ். ராதாகிருஷ்ணன் அவர்கள் எழுதிய முகநூல் பதிவு மூலம் வெளிப்பட்டிருக்கிறது.
இதோ அந்த பதிவு:
“22.09.2016 அன்று  கி.ரா.வை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், கல்கி ப்ரியன், நானும் சந்தித்ததைப் பற்றி பதிவு செய்திருந்தேன். புதுச்சேரியில் கி.ரா.வை சந்திக்கும் போதெல்லாம் அறியாத பழைய செய்திகளையும் நிகழ்வுகளையும் பேசி விவாதிப்பதுண்டு.  அதில் ஒரு நிகழ்வு.. பெரியார் – மணியம்மை திருமணம் குறித்தது.
பெரியார் – மணியம்மை திருமண சர்ச்சையின் போது திருவண்ணாமலையில் மூதறிஞர் ராஜாஜியும் பெரியாரும் தனியாகச் சந்தித்து திருமணத்தைக் குறித்துப் பேசியதாக கடந்த காலச் செய்திகள் உண்டு. அவ்விருவரும் பேசியதென்ன என்று கேள்விக் கணைகளும் எழுப்பியதுண்டு. இதில் புதிதாக அறியப்படவேண்டியது  என்னவென்றால் இந்தப் பேச்சுவார்த்தையில் இரசிகமணி டி.கே.சியும் மூன்றாவது நபராக கலந்துக் கொண்டார் என்பதை கிரா சொல்லித் தான் அறிந்தேன்.
கே.எஸ்.ஆர். - கி.ரா. - வைத்தியநாதன்
கே.எஸ்.ஆர். – கி.ரா. – வைத்தியநாதன்

இரசிகமணி உடனிருப்பதைப் பார்த்த பெரியார் “நம்ம ரெண்டு பேரு மட்டும் தான் பேசணும்” என்று சொல்லியுள்ளார். சூழ்நிலையை உணர்ந்த இரசிகமனி எழுந்து அறையை விட்டு வெளியேற முற்பட்ட போது இராஜாஜி, “ நாயக்கரே! நான் வேற.. அவர் வேற இல்ல… இரசிகமணி யோசனைகள் சொல்வாரு.. இருக்கட்டும்” என மறுத்துப் பேசினார்.
அந்தப் பேச்சுவார்த்தை குறித்து டி.கே.சி., கிராவிடம் சம்பாஷித்த போது, பெரியார் இராஜாஜியிடம் மணியம்மையைத் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறேன். வயதாகிய காலத்தில் எனக்கு ஒரு துணை வேண்டும் என்று சொன்னதாகவும் அதற்கு ராஜாஜி அவர்கள், “நாயக்கரே!  திருமணம் வேண்டாமே… தவிர்க்கலாமே” என்றாராம்.
அப்போது இரசிகமணி இடைமறித்து ராஜாஜியிடம், “ உங்க நண்பர் நாயக்கர் கல்யாணம் பண்ணிக்கிட விரும்பறார். இரண்டு பேரும் விரும்புனா கல்யாணம் பண்ணிக்கிட வேண்டியது தானே. மனப்பூர்வமா ரெண்டு பேரும் விரும்பும் போது நீங்க தடுக்கணுமா?” எனக் கூறியுள்ளார்” – இவ்வாறு பதிவிட்டிருக்கிறார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்.
பெரியார் தொண்டர்கள் பலரும்கூட அறியாத விசயம் இது.