அரசியல் தலைவர்களின் தீபாவளி பலகாரங்கள்…

 

Vijaykanth
விஜயகாந்த்

கேப்டன் : குலோப்ஜாமூன்… எப்போதும் “திரவத்தில்” மிதக்கும் என்பதால் இது இவருக்கு ரொம்பப் பிடிக்கும்…உருண்டை வடிவமானது அடிக்கடி வேறு இடங்களுக்கு உருண்டோடி விடும் என்பதால் அப்படி விடமால் ஜாக்கிரதையாக சாப்பிட வேண்டும்….

Rahul Gandhi
ராகுல்

ராகுல் : கை” முறுக்கு… மொறு மொறுப்பாக இருக்கும் போதே சாப்பிடாமல் பெரிசுகளிடம் கொடுத்து விட்டு நமுத்து போனபின் சாப்பிடுவது இவருக்கு பிடிக்கும்… குடிசைக்குள்ள உட்கார்ந்து சாப்பிடறது இவரு பாணி…

Modi
மோடி

மோடி : ஜாங்கிரி…. காவி கலர் இனிப்பு என்பதால் இவருக்கு இஷ்டம்….. நிறைய சுத்தல் உள்ள ஸ்வீட் என்பது இவர் உலகம் முழுவதும் சுற்றுவதை குறிக்கும்… பெரியவர் ஒருவர் சாப்பிட வேண்டியதை தட்டிப் பறித்து சாப்பிடுவார்….

Narayanaswamy
நாராயணசாமி

நாராயணசாமி : அல்வா…. இது இவர் மட்டும் சாப்பிட்டாமல் எல்லோருக்கும் கொடுப்பார்… வாயில் போட்டால் வழுக்கி செல்லாமல் ரப்பராக இழுக்கும் பதத்தில் இருப்பதே இவருக்கு பிடிக்கும்…. 15 கிராம் துண்டுகளாக இருப்பின் கொள்ளை இஷ்டம்……

lalu
லல்லு

லல்லு : பால் கோவா…. பசும் பாலில் செய்ததால் மிகப் பிடிக்கும்… மாட்டில் பாலாக கறக்காமல் பால் கோவாவாக கறக்க ஆசைப்பட்டு உள்ளே இருந்தவர்… இவரால் சாப்பிட முடியாது போனால் அதை மனைவியிடம் கொடுத்து விடுவார்

Subramanian Swamy
சுப்பிரமணிய சாமி

சுப்பிரமணிய சாமி : சீடை…… கரகரப்பாக வாயிலும் கரையும் கடக் முடக் என பல்லையும் உடைக்கும்…. கணிக்க முடியாத பலகாரம்…..சில வேளைகளில் வெடிக்கவும் செய்யும்…

Sonia Gandhi
சோனியா

சோனியா : பீட்ஸா…. இந்திய உணவு ஒத்துக் கொள்ளாது…. பார்லிமெண்ட் வடிவில் வட்டமாக இருக்கும் பீட்ஸா தான் பிடிக்கும்… கட்சி காரர்கள் துண்டு போட்டு சாப்பிடுவார்கள்…. சில நேரம் இவரே துண்டாக்குவார்…

mamata banerjee
மம்தா

மம்தா : காராசேவு….. தீதிக்கு பிடித்தது அதிகாரமும் அதிக காரமும்….. காரா சேவை காரச்சட்னியோடு சாப்பிடுவார்… மொறு மொறுப்பாக இருந்தால் தான் பிடிக்கும்… “மாவோ”டு இருந்தா அவ்வளவு தான் ருத்ர தாண்டவம் ஆடிடுவார்….

Karunanidhi
கலைஞர்

கலைஞர் : லட்டு….. ஆளுக்கு ஏற்றார் போல பிடித்து தருவார்… சிலதில் முந்திரி அதிகம் இருக்கும்…. சிலதில் இருக்காது… ஆனால் முந்திரி உள்ள லட்டு குடும்பத்தினருக்கே இது வரை கிடைத்துள்ளது…. இதில் எதுவும் பிரச்சனை வந்தால் லட்டை பூந்தியாக்கி அவரே சாப்பிட்டுவிடுவார்…..

Jayalalitha
ஜெயலலிதா

ஜெயலலிதா : கொழுக்கட்டை.. உள்ளே என்ன வைத்திருக்கிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரியும்.. இனிப்பு பூரணமும் இருக்கும்… கசப்பு அஜீரணமும் இருக்கும்…எந்த மாவிலும் அவர் பிடிப்பதே கொழுக்கட்டை…

Stalin
ஸ்டாலின்

ஸ்டாலின் : கேசரி… எளிதாக செய்யும் ஸ்வீட் தான்… ஆனா இதுக்கே ரொம்ப நாளா காத்துகிடக்கிறார்… நல்லா கிண்டி தட்டுல போடுற நேரத்துல அதை தட்டி வுடுவது இவர் கவலை… எப்படியாவது விடியட்டும்ன்னு நினைச்சு முயற்சி செய்யறார்.. எல்லா கேசரியும் பிடிக்கும் ஆனா இந்த மதுரைப்பக்கம் செய்யுற “அன்னா”சிப் பழ கேசரி ஆகவே ஆகாது…

Vaiko
வை.கோ

வை.கோ. : ஜிலேபி… சற்றே “புளி”ப்பு சுவையுள்ளதால் இதை மிக மிகப் பிடிக்கும்…. சுற்று உள்ள இனிப்பு என்பதால் சுற்றி வருபவரின் மனங்கவர்ந்த இனிப்பு… நடந்து கொண்டே சாப்பிடுவது இவர் ஸ்டைல்..

Ramdoss
ராமதாஸ்

ராமதாஸ் : மைசூர் பா….. மாம்பழ மஞ்சள் நிறத்தில் இருப்பத்தால் இது இவருக்கு பிடிக்கும்…. சாஃப்ட்டான பதத்தில் சாப்பிட நினைத்தாலும் கடினமான பதத்தில் தான் கிடைக்கிறது…. நல்ல ஜாதிக்கடலையை அரைத்து மாவாக்கினால் அது கிடைக்கும் என நம்புகிறார்…

தா.பாண்டியன்
தா.பாண்டியன்

தா.பாண்டியன் : அதிரசம்….. நல்ல சிவந்த நிறத்தில் இருப்பதால் மிகவும் பிடிக்கும்…. பக்குவமாக இடிக்காவிட்டால் உதிரும் பலகாரம் இது… ஆகவே யார் இடித்தாலும் பெண்களே அடித்தாலும் கலங்க மாட்டார்,,, அவருக்கு உதிராது ஒண்ணு கிடைச்சாலும் போதும்….

திருமா
திருமா

திருமா : சமோசா…. உள்ள இருக்குற கிழங்க வச்சு தான் இதுக்கு மதிப்பே… சில நேரம் கிழங்கு கெட்டாலும் இதுக்கும் கெட்டபேருதான்… இருந்தாலும் இவருக்கு இது பிடிச்சு போச்சு… எப்படி வேணா மடிக்கலாம் ஆனா பாக்கறதுக்கு வெறைப்பா நிக்குறா மாதிரியே தெரியும்….

ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

ப.சிதம்பரம் : பாதாம் அல்வா…… ரொம்ப காஸ்ட்லி… ஏழைங்க வாங்க முடியாது…. நாளுக்கு நாளு விலை ஏறிகிட்டே இருக்கும்… எல்லா கடையிலும் நிறைய இல்லாம கம்மியா பற்றாக்குறையிலதான் இருக்கும்… அதனால் தான் இவருக்கு இது பிடிக்கும்..

img1121204013_1_2

சரத்,பரிதி,&நாஞ்சில்
சரத்,பரிதி,&நாஞ்சில்

சரத்,பரிதி,&நாஞ்சில்: என்ன கொடுத்தாலும் பிடிக்கும்…ஆனா ஏதாவது கொடுக்கணும். கேசரின்னு சொல்லி காராபூந்தி கொடுத்தா கூட அது இனிக்குதுன்னு சத்தியம் பண்ணுவாங்க… இன்னோவால போகும் போது கொறிக்க ஏதாவது கொடுத்தாலே போதும்… சத்தம் கொஞ்சம் ஜாஸ்தி…

மன்மோகன்
மன்மோகன்

மன்மோகன் : மிக்சர்….. இதுக்கு பெருசா விளக்கம் வேணுமா என்ன!!!!!!

– வெங்கடேஷ்