ரஜினிகாந்த் நடித்து, கலைப்புலி தாணு தயாரிப்பில் சமீபத்தில் வெளியான “கபாலி” திரைப்படத்துக்கு வரிவிலக்கு வழங்கியதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வழக்கிறிஞர் ஜி.எஸ்.மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
“தமிழ் கலாச்சாரம், மொழி மேம்பாடு ஆகியவற்றிற்காக கொண்டு வந்த வரிவிலக்கு தற்போது அரசியல் காரணங்களுக்காக தவறாக பயன்படுத்தப்படுகிறது. எனவே வரிவிலக்கு வழங்கிய வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
மேலும் கபாலி படத்திற்கு விதிக்கப்பட்ட வரிவிலக்கை திருப்பபெறவேண்டும் என்றும், வரிவிலக்கு அளிக்கப்பட்ட தொகையை கபாலி படத் தயாரிப்பாளர் தாணுவிடமிருந்து வசூலிக்க வேண்டும்.
இது போன்ற வரிவிலக்கு தவறாக அளிக்கப்படுவதால் அரசுக்கு ஆண்டுக்கு 50 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது” என்று தனது மனுவில் தெரிவித்திருக்கிறார்.
இந்த மனு ஏற்கபட்டு ,வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.
“கபாலி” திரைப்படம் வெளியானபோதே, வரிவிலக்கு குறித்த சர்ச்சை ஏற்பட்டது. வன்முறை அதிகமுள்ள இந்த திரைப்படத்தின் பல காட்சிகளை சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட சில நாடுகள் நீக்கின. மேலும் சில நாடுகளில் இப்படத்தை குழந்தைகள் பார்க்கக்கூடாது என தடை விதித்தன. இப்படிப்பட்ட படத்துக்கு வரிவிலக்கா என்று சமூக ஆர்வலர்கள் பலர் குரல் எழுப்பினர்.
மேலும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தக்கு பல மடங்கு அதிகமாக பணம் வசூலிக்கப்பட்டதும் புகாராக எழுந்தது குறிப்பிடத்தக்கது.