திரைக்கு வராத உண்மைகள் – 2
(வேறொரு நட்சத்திரத்தின் வேறொரு அனுபவம் என்று கடந்த வாரம் சொன்னேன். ஆனால் மலேசியாவில் ரஜினி யாருடைய பிடியிலோ இருப்பது போனற செய்திகள் வந்துகொண்டிருக்கின்ற வேளையில், இந்த பழைய சம்பவத்தைச் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்பதாலம்.. இந்த வாரமும் ரஜினி குறித்த சம்பவம்.. )
ரஜினிகாந்த் நடித்த ’ எஜமான்’ படத்தின் “ஒரு நளும் உனை மறவாத….’ என்ற பாடல் படப்பிடிப்பு. நடப்பதோ ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தைத் தாண்டி ராஜமுந்திரி என்ற நகரத்திற்குப் பக்கத்தில் ஒரு அத்துவானப் பகுதியில்.
ஒரு நாள் காலை சென்னையிலிருந்து புறப்பட்டு, படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே வந்து விட்டார், பாலு ஜீவல்லர்ஸ் அதிபர் காலம் சென்ற பாலு. ‘”புன்னகை மன்னரின் பொன்நகை கூடம்’’ என்று பாரதிராஜாவின் குரல் பின்னணியில் ஒலிக்க டி.வி விளம்பரத்தில் சிரிப்பு போஸ் கொடுத்த சிரிப்புச்செம்மல்.
வந்த பாலு, காரிலிருந்து இறங்கினார்: ரஜினியுடன் கைகுலுக்கினார்: முகம் மலர, வாழ்த்து தெரிவித்தார்.
ஏன்?
அன்றைக்கு ரஜினிகாந்த் பிறந்த நாள். அதற்கு வாழ்த்து தெரிவிக்கத்தான் ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து நெடிய பயணம் செய்து சென்னையிலிருந்து ராஜமுந்திரி வந்துவிட்டார். அதுவும் படப்பிடிப்பு நடக்கும் இடத்தை அறிந்து அங்கேயே வந்து சேர்ந்து விட்டார்.
ரஜினி தன் பிறந்த நாள் அன்று, தனது ரசிகர்கள் சென்னையில் வந்து குவிவதைத் தடுக்கவே அந்த நாளில் சென்னையில் இல்லாமல் (ரசிகர்களுக்கு அறிவித்து விட்டு) வெளியூர் படப்பிடிப்புக்கு வந்து விடும் பழக்கத்தை ஆரம்பித்திருந்தார்.
அப்படியிருக்க தனது ரசிகர் வகையறாவில் சேர்த்தி இல்லாத ஒரு வர்த்தகர் இப்படி அனுமார் சஞ்சீவி மலையைத் தூக்கி கொண்டு லங்காவுக்கு பறந்தது போல கையில், ஏதோ ஒரு டப்பாவைத் தூக்கிக் கொண்டு இவ்வளவு தூரம் பறந்து வந்திருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்டார் ரஜினி.
வந்த பாலு சும்மா தான் மட்டும் தனியாக வரவில்லை. கூடவே பிரபல புகைப்பட நிபுணர் யோகாவையும் அழைத்து வந்திருந்தார். யோகாவின் தோளில் மூன்று வகை கேமிராக்கள் தொங்கி கொண்டிருந்ததன.
ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து மாலை அணிவித்து தோளோடு தோள் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார் பாலு. போட்டோவின் பெரும் பகுதியை அவர் புன்னகைதான் “அங்கிங்கெனாதபடி” எங்கும் ஆக்கிரமித்திருக்கும்.
ஆக வாழ்த்து சொல்லி போட்டோவும் எடுத்தாகிவிட்டது. படப்பிடிப்பின் இடையே இதற்கென ரஜினி பத்து நிமிடம் ஒதுக்கியதே பெரிது.
ஆனால் பாலு, தன் கையில் கொண்டு வந்திருந்த பாக்ஸ்ஸைத் திறந்தார். நகை பெட்டி அது! அதிலிருந்து ஒரு தங்கச் சங்கிலியை எடுத்தார். ஏதோ டாலர் கோர்த்த சங்கிலி. ரஜினியின் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றச் சொல்லி விட்டு இந்த சங்கலியை அணிவித்தார்.
“ம்ஹீம்……எதுக்குண்ணே, இதல்லாம்..?” என்று மறுத்தார் ரஜினி.
“ம்ஹீம்.. இது பிறந்த நாள் அன்பளிப்பு..’’ என்று கூறிவிட்டு ரஜினியின் கழுத்தில் அந்தச் சங்கலியை பிடிவாதமாக அணிவித்தார் பாலு.
ரஜினி ‘’ஒகே’ஒகே’’’என்ற படி பாலுவுக்கு கை கொடுத்தார். விடைபெறும் நேரத்தில் பாலு, “இருங்க… இருங்க ஒரு போட்டோ எடுத்துக்கணும்’’ என்றார்.
யோகா தன் கழுத்தில் தொங்கிய மூன்று விதமான கேமிராக்கள் மூலமும்,மூன்று வகைப் படம் பிடித்தார்.
அதாவது ஒன்று டிரான்ஸ்பரன்சி. , பத்திரிக்கைகளில் அந்தக்காலத்தில் அட்டைப்படமாக பிரசுரிக்க. இந்த வகை டிரான்ஸ்பரன்சி படங்கள்தான் பயன்படுத்தப்படும். அடுத்து வண்ணப்படம். அதற்கடுத்து கறுப்பு வெள்ளைப் படம். மூன்று வகைப் படங்களுக்கும் தனிதனியே மூன்று வகை கேமிராக்கள்.
யோகா’ விரைவாகப் படம் எடுப்பதில் நிபுணர். இந்த கையில் ஒரு கேமிரா அந்த கையில் ஒரு கேமிரா வைத்து கொண்டு ஒரு சேர க்ளிக்கி படபடவென படம் பிடித்து விட்டார்.
நிலமையைக் கண்டு ரஜினி திகைத்தார். அவருக்கு புரிந்துவிட்டது.
“அப்பாடா! போதும்டா சாமிட என்கிற உணர்வோடு ரஜினி பாலுவுக்கு விடைகொடுக்க முயல’, “பொறுங்க தலைவரே! அவசரப்படாதீங்க .. இன்னோரு அன்பளிப்பு இருக்கு” என்று கூறிக்கொண்டே ஒரு தங்க பிரேஸ்லட்டை எடுத்து ரஜினி கையில் அளித்தார் பாலு. .அளித்து விட்டு ரஜினியைக் கட்டி அணைத்துக் கொண்டு யோகாவை ”..ம்..எடுங்க” ‘என்றார்.
அடுத்து மூன்று “பளிச்”கள்.
ரஜினி முகம் போன போக்கைப் பார்க்க வேண்டுமே! எள்ளும்,கொள்ளும் என்ன.. எண்ணெய் சட்டியே வெடித்தது!
இப்போது ரஜினியே அடுத்து காட்சியை அனுமானித்து விட்டார்: ”அண்ணே, வேற ஏதாவது அன்பளிப்பு வைச்சிருக்கீங்களா?”
“இல்லாமே பின்னே?” என்றபடியே பாலு மீண்டும் நகைப் பெட்டியைத் திறந்தார்.
கோபத்தில் ரஜினி ‘’மவனே” .என்கிற மாதிரி பல்லை நறநறத்தார். இன்னொரு பக்கம் உதவி இயக்குநர் வந்து ரஜினியிடம், ஷாட் ரெடி சார் ……’என்று அழைத்தார்.
பாலு உ.இயக்குநரிடம் ‘’இருப்பா அவசரப்படாதே! சார் முக்கியாமான வேலையா இருக்காரில்ல” என்றார்.
ரஜினி, “அடேய்….விட்டேன்னா தெரியும்” ‘என்று. உ.இயக்குநரைப் பார்த்து கோபமாக சொன்னார். அது உ.இயக்குநருக்கு சொன்னதல்ல: பாலுவுக்குச் சொன்னது என்று பக்கத்தில் இருந்தவருக்குப் புரிந்தது. ஆனால் பாலுவுக்கு புரியவேண்டுமே! இல்லை!
அவர் அற அமர அக்மார்க் பிராண்ட் புன்சிரிப்போடு ஒரு மோதிரத்தை எடுத்தார்: ரஜினியிடம் ’”கையை நீட்டுங்க” என்றார்.
“கையை நீட்டக் கூடாதுன்னுதான் பார்க்கிறேன்’’ என்று டபுள் மீனிங்கில் சொன்னார் ரஜினி.
பாலுவோ, மோதிரத்தை அணிவித்து விட்டு, “ம்” என்றார், யோகாவைப் பார்த்து! கடமை வீரர் யோகா காரியத்தை மின்னல் வேகத்தில் முடித்தார். காலி டப்பாவையும் ரஜினி கையில் கொடுத்தார் பாலு. “இதற்கு ஒரு போட்டோ எடுப்பீங்களா?” என்று கிண்டலாக கேட்டார் ரஜினி. “ம்ஹீம் இது நகையையெல்லாம் போட்டு வைச்சிக்கிறதுக்கு” என்று சீரியஸாக விளக்கமளித்தார் பாலு.
ரஜினி கோபத்தை சிரிப்பென்னும் பனித்திரையால் மறைத்தபடி ‘’”நீங்க எடுத்த மூன்று படமும் எதற்கு? ஒன்னு –தினத்தந்திக்கு! இன்னேன்னு-தினகரன்.. அடுத்தது மாலை முரசுக்கா” என்று பாலுவிடம் கேட்டார்.
பாலு அசட்டுச் சிரிப்பு சிரித்தார்.
உண்மையில் மறுநாள் அந்த புகைப் படங்களை பத்திரிக்கைகளுக்கு கொடுத்து வெளியிட்டு விளம்பரம் தேடத்தான் பாலு படம் எடுத்தார். அதற்காகத்தான் ராஜமுந்திரி வரை வந்திருந்தார்.
புரியாத ரஜினிக்கு?
“ஷீட்டிங் வேகமாக போயிகிட்டுருக்கு. நீங்க புறப்புடுங்க’” என்று கூறி பாலுவுக்கு விடை கொடுத்தார் ரஜினி.
பாலு சென்ற சில நிமிடங்களுக்கெல்லாம், ரஜினி தன் உதவியாளர் ரமேஷை அழைத்தார். “இந்தா.. இந்த மூன்று நகையையும் பிடி. அந்த பாலு சென்னை போய் சேருவதற்கு முன்னாலேயே, நீ சென்னை போய் சேர்ந்து, இந்த நகைகளை அவர் கடையில் உரியவரிடம் சேர்த்து விட்டு வரவேண்டும்” என்று உத்தரவு போட்டார்.
ரமேஷ் அப்போதே நகைகளைப் பெற்றுக் கொண்டு காரில் சென்னை விரைந்தார். பத்து மணிநேர அசுரவேக பயணத்தில் சென்னை வந்து சேர்ந்து, பாலுவின் மகனிடம் நகைகளைத் திருப்பிக்கொடுத்தார்.
பிறகு விஷயம் தெரிந்த பாலுவுக்கு எப்படி இருந்திருக்கும் என்று யூகித்துப்பாருங்கள்.
எதுவும் தெரியாததுபோலத்தான் இருப்பார் ரஜினி. ஆனால் எல்லாமும் அறிவார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.