சென்னை:
தமிழகத்தில் உள்ள மழைநீர் கால்வாய், கழிவுநீர் கால்வாய்களை போர்க்கால அடிப்படையில் உடனே சுத்தம் செய்ய தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மேலும் ஏற்கனவே ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுபடி எந்த பணியும் நடைபெறவில்லை என தமிழக அரசை குற்றம்சாட்டியுள்ளது.
மாற்றம் இந்தியா என்ற அமைப்பின் இயக்குனர் பாடம் ஏ.நாராயணன் 2014-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில், மழைநீர் கால்வாய் மற்றும் கழிவுநீர் இணைப்புகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய உள்ளாட்சி அமைப்புகள் மனிதர்களை பயன்படுத்துகின்றன. இந்த அடைப்புகளை சரி செய்ய எந்திரங்களை பயன்படுத்த உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்பை பெற்றவர்கள், மழைநீர் கால்வாயில் கழிவு நீரை கலக்கச் செய்பவர்களுக்கு அபராதமாக பெரும் தொகை விதிக்கும் விதமாக தமிழக அரசு சட்டம் கொண்டு வரவேண்டும்’ என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
நேற்று இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வினியோகம் முதன்மைச் செயலாளர் பதில் மனு தாக்கல் செய்தார். அதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சட்டவிரோத கழிவுநீர் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கும் விதமாக சட்டத்திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டும் நடந்து முடிந்த சட்டசபை கூட்டத் தொடரில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படவில்லை.
சட்டவிரோதமாக கழிவுநீர் இணைப்புகளை துண்டிப்பதற்கும், அந்த இணைப்புகளை வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் இதுவரை அரசு முயற்சிக்கவில்லை.
மழைநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் சரியாக சீரமைக்கப்படாததால் தான் கடந்த ஆண்டு சென்னையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது என்பதை தமிழக அரசு மனதில் கொள்ள வேண்டும்.
சாக்கடைக்கழிவுகளைத் தூர்வார நவீன எந்திரங்களை வாங்கும்போது, அதிகாரிகள் அறிவியல் தொழில்நுட்பத்துடன் சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு செயல்படாததால்,
தற்போது வாங்கப்பட்டுள்ள நவீன எந்திரங்கள் அனைத்தும் அகலமான பெரிய சாலைகளில் மட்டும் பயன்படுத்தும் விதமாக உள்ளன. குறுகிய சாலைகளில் இந்த எந்திரங்களை பயன்படுத்த முடியவில்லை.
மனிதக்கழிவுகளை மனிதர்களே அள்ளுவதை தடை செய்யும் வகையிலும், கழிவுநீர் சீரமைப்புக்காகவும் கடந்த 2009-ம் ஆண்டு தமிழக அரசு, 13 பேர் அடங்கிய ஒரு சிறப்புக் குழுவை அமைத்தது. இந்த குழு 2 மாதத்துக்கு ஒருமுறை கூடி, ஆலோசனைகள் செய்து, அரசுக்கு பரிந்துரைகளை அனுப்பியிருக்கவேண்டும்.
ஆனால், இந்த குழு முறையாக செயல்படாமல் இருந்துள்ளது. எனவே,
சென்னை பெருநகர குடிநீர் வாரிய ஆணையரை, தலைவராக கொண்ட இந்த குழு 10 நாட்களுக்குள் உடனடியாக கூடி, எல்லா மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை நவீன முறையில் சுத்தம் செய்வது தொடர்பான ஆலோசனைகளை நடத்தி தனது பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த குழுவில் இடம் பெற்றுள்ள அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள் ஆகியோர், வரப்போகிற மழை காலத்தில் பெய்யும் மழையினால் ஏற்படும் வெள்ளத்தினால் சேதம் ஏற்படுவதை தடுப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து தகுந்த ஆலோசனைகளை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும்.
இந்த பரிந்துரைகளை ஏற்று, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களை எந்திரங்கள் மூலம் சீரமைக்க அரசு தகுந்த நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்கவேண்டும்.
இந்த வழக்கு விசாரணையை வருகிற நவம்பர் 4-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.