கோவை:
மீண்டும் ஒரு, ஒருதலைக் காதல் கொலை தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.
கேரளாவைச்  சேர்ந்த  சோமு – சாரதா தம்பதியின் மகள் தன்யா. வயது 23.   இவர்கள், அன்னூர் தென்னம்பாளையம் சாலையில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தனர்.
பிஎஸ்சி ஐடி படித்துள்ள  தன்யா, திருப்பூரை அடுத்த பொங்கலூரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். தன்யாவை கடந்த 6 மாதமாக கேரளாவை சேர்ந்த ஜகீர்(25) ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். அவரது காதலை தன்யா ஏற்க மறுத்ததை தொடர்ந்து, அந்த வாலிபர் மீண்டும் கேரளா சென்று விட்டதாக  சொல்லப்படுகிறது.

தன்யா
தன்யா

இந்தநிலையில் தன்யாவுக்கும்,  தினேஷ்(26) என்பவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்து  நிச்சயத்தார்த்தம் செய்தனர்.
நேற்று ஓணம் பண்டிகையையொட்டி தன்யாவுக்கு  அலுவலகம் விடுமுறை விடப்பட்டு இருந்தது. தன்யா தனது வருங்கால கணவருடன் வெளியே சென்று விட்டு மாலை ஐந்து  மணியளவில் வீடு திரும்பினார்.
அவர் வந்தததும் அவரது  தந்தை சோமு தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்ததால், மனைவி சாரதாவுடன் மருத்துவமனைக்கு செல்வதாகச் சொல்லி  புறப்பட்டார். தன்யாவை வீட்டிற்குள் வைத்து வெளியே பூட்டிவிட்டு சென்றிருந்தார். மாலை 6.30 மணி அளவில் வீடு திரும்பிய பெற்றோர், வீட்டுக்குள் தன்யா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பிணமாக..
பிணமாக..

இதுகுறித்து தகவல் அறிந்த கோவை எஸ்.பி. ரம்யாபாரதி, கருமத்தம்பட்டி டிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி மற்றும் அன்னூர் காவல் நிலைய காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தன்யாவை ஒருதலையாக காதலித்த கேரள வாலிபர் ஜகீர் நேற்று மாலை வீட்டின் பின்பக்க சுவர் ஏறிக் குதித்து வீட்டிற்குள் நுழைந்ததாகவும், தன்யாவை தலையில் பலமாக தாக்கி  வயிற்றில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியது தெரியவந்தது.
அதிகாரிகள் சிறைபிடிப்பு: ஒரு தலைகாதலால் தமிழகத்தில் மீண்டும் ஒரு இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டது குறித்து, தகவல் அறிந்த அன்னூர் மக்கள் தன்யாவின் வீட்டின் முன் திரண்டனர். குற்றவாளியை உடனடியாக பிடிக்காவிட்டால் அதிகாரிகள் யாரையும் வீடு திரும்ப விட மாட்டோம் என்று ஆக்ரேசமாக  கூறி சிறைபிடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.