sasi
சசிகலா புஷ்பாவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்தது மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் கைது செய்யப்படுவாரா? பரபரப்பான சூழ்நிலை உருவாகி உள்ளது.
திமுக எம்பி திருச்சி சிவாவை விமான நிலையத்தில் தாக்கியதை அடுத்து அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாபுஷ்பா,  தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி ஜெயலலிதா தம்மை அடித்தார் என்று ராஜ்யசபாவில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர்மீது அவர் வீட்டு வேலைக்காரர்கள் புகார் கூறியதையடுத்து, அவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு காரணமாக தாம்  கைது செய்யப்படலாம் என கருதிய சசிகலாபுஷ்பா மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தார். மனுவில் அவரது ஒரிஜினல் கையெழுத்து இல்லை என்று அரசு வக்கீல் வாதிட்டதையடுத்து, மதுரை ஐகோர்ட்டு, சசிகலாபுஷ்பாவை  கடந்த மாதம் 29ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டது.
இதை எதிர்த்து அவர் உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உச்ச நீதி மன்றம் அவரை கைது செய்ய 6 வாரம் தடை விதித்ததோடு 29ந்தேதி  மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து திரும்பிய சசிகலாபுஷ்பா  மதுரை வந்து விசாரணைக்கு ஆஜரானார். அதைத்தொடர்ந்து விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இன்று காலை நடைபெற்ற விசாரணையில்,  சசிகலா புஷ்பா தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை இன்று நீதிபதி வேலுமணி தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார்.  அவரது கணவர், மகன் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவையில் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், முன்ஜாமின் மனுவில், அவரது கையெழுத்து தொடர்பாக எழுந்த சந்தேகம் குறித்து ஒத்தக்கடை போலீசார் விசாரிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.