ரவுண்ட்ஸ்பாய்:
தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் செல்ல பாண்டியன், நமக்கு நல்ல தோஸ்து. ஒரு மாதிரி பார்க்காதீங்க… அவரது கட்சி(!)யோட பேரு, “மது குடிப்போர் சங்கம்” இல்லே.  மது குடிப்போருக்கு விழிப்புண்ரவு ஊட்டி, திருத்துற சங்கம்.  மிரண்டுட்டீங்களா…? இந்த விளக்கத்தை அவரே ஒருதடவை என்கிட்ட சொன்னாரு!

மாபெரும் போராட்டம்
மாபெரும் போராட்டம்

அவரு நிறைய போராட்டம் பண்ணியிருக்காரு…  மது பாட்டில் விலையைக் குறைக்கணும்,  சென்னையில இருக்கிற அத்தனை ஒயின் சாப்களையும் மூடிட்டு தீவுத்திடல்ல நிறைய கடையைத் திறக்கணும்.. குடிக்கறவங்க அங்க போயி குடிச்சு கிடந்துட்டு, தெளிவா வெளியில வரலாம், குடிக்கிறவங்க சாதா ஜட்டி போடாம..டவுசர் மாடல் ஜட்டி போடணும்… இப்படி நிறைய ஐடியா கொடுத்து  அதுக்காக போராட்டங்களும் நடத்தியிருக்காரு.
கடந்த சட்டமன்ற தேர்தல்ல தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுத்தாரு. (அதனாலதான் பலமான எதிர்க்கட்சியா தி.மு.க. ஜெயிக்க முடிஞ்சுச்சோ?)
சரி, இப்ப மேட்டருக்கு வருவோம்..
காலைல போன் பண்ணி, “சென்னை அயனாவரத்துல இருக்கிற கவிஞர் சர்வக்ஞர் சிலை முன்னால போராட்டம் நடத்தப்போறன்”னு சொன்னாரு.
download
“என்னா தலைவரே… கர்நாடக அரசுகிட்டேயும் குடி சம்பந்தமா கோரிக்கை போராட்டமா”னு கேட்டேன்.
“அடே.. ரவுண்ட்ஸ் பாய்…! நாங்களும் தமிழங்கதான்.. எங்களுக்கும் உணர்வு இருக்கு. கர்நாடகாவுல தமிழர்கள் தாக்கப்படுறாங்களே.. அதைக் கண்டிச்சுதான் கன்னட கவிஞன் சிலை முன்னால காலை சரியா பத்து மணிக்கு போராட்டம்” அப்படின்னாரு.
சரி நானும் நேரா போயி மேட்டரை கவர் பண்ணலாம்னு தான் நினைச்சேன். ஏன்னா, எப்படியும் தலைவர் செல்லபாண்டியோடு இன்னும் ரெண்டு மூணு பேராவது போராட்டத்துல கலந்துக்க வந்திருப்பாங்க. கொஞ்ச நேரம் ஜாலியா அரட்டை அடிச்சிக்கிட்டிருக்கலாம்.
ஆனா, ஊருலேருந்து  வந்த என் கொளுந்தியா, “மாமா, தி.நகர்ல பொருட்கள் பர்ச்சேஸ் பண்ணணும். அழைச்சுகிட்டு போங்க”னு சொல்லிட்டா.
மறுக்க முடியுமா?
தி.நகர் பர்ச்சேஸ் முடிஞ்சு, அயனாவரம் போக, மதியம் பன்னிரண்டரை போல ஆயிடுச்சு. அப்பத்தான் தலைவர் செல்லபாண்டியும் இன்னும் மூணு பேரும் போராட்டத்துக்கு  தங்களை தயார் பண்ணிகிட்டு இருந்தாங்க. இவங்க நாலு பேரு போராட்டத்துக்கு, பத்து பன்னிரண்டு போலீஸ்காரங்க, ரெண்டு வாகனத்துல வந்திருந்தாங்க.
தலைவர் செல்லபாண்டி, “கன்னடர் அராஜகம் ஒழிக, மத்திய மாநில அரசுகளே நடவடிக்கை எடு” அப்படிங்கிற மாதிரி ஏதோ கோசம் போட,  ஜீவா பூங்கா  உள்ளார போறதுக்கு முன்னாடியே போலீஸ்காரங்க அவரை அரஸ்ட் பண்ணாங்க. அவரோட இருந்த இன்னும் ரெண்டு பேரையும்தான்!
மிரண்ட குழந்தை
மிரண்ட குழந்தை

ரோடு ஓரத்துல  இந்த மாபெரும் போராட்டம் நடந்தப்போ, ஒரு அம்மா, தன்னோட குழந்தையை நடக்கவச்சு அழைச்சுகிட்டு வந்தாங்க. கையில  கூடை. அப்போ அந்த குழந்தை, இந்த போாரட்டக்காரர்களை பார்த்து, “யாரும்மா இவங்க”னு  மிரண்டு போய்   கேக்க.. அதுக்கு அந்தம்மா, என்ன பதில் சொல்லறதுன்னு தெரியாம முழிச்சாங்க.
போராட்டம் மாபெரும் வெற்றிங்கிறது அப்பவே எனக்கு புரிஞ்சிபோச்சு!
இந்த போராட்டத்தை கவர் பண்ண, செய்தியாளருங்க யாரும் வரலை. (நான் ஒருத்தன்தான் வந்தேன்… பட், நான் செய்தியாளரு இல்லையே..!)
அப்பத்தான் தலைவரு செல்லபாண்டி ஒரு வேலை செஞ்சாரு. போலீஸ்கிட்ட, “ஒரு நிமிசம் சார்”னு சொல்லிட்டு, தான்கைது செய்யப்பட்டதை இன்னொருத்தர விட்டு போட்டோ எடுக்கச்சொன்னாரு.  அந்த படங்களை, படபடன்னு வாட்ஸ்அப்ல செய்தியாளருங்களுக்கு அனுப்பினாரு.
தெளிவான மனுசன்!