நெட்டிசன் பகுதி:
வழக்கறிஞர் சுந்தர்ராஜன் ( Sundar Rajan) அவர்களின் முகநூல் பதிவு:
ஒரு பயணி தான், மேற்கொள்ளும் ரயில் பயணத்திற்காக வாங்கும் பயணச்சீட்டு என்பது ஒரு சட்டரீதியான ஒப்பந்த பத்திரம். பயணச்சீட்டு வாங்கிய பயணியை குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதற்கு ரயில்வே துறை உறுதி அளிக்கிறது என்பதே இந்த ஒப்பந்தம்.
இதற்கான மறுபயன்தான் பயணக்கட்டணம்.
இந்தச் சேவையில் குறைபாடு ஏற்பட்டால் அதை நிவர்த்தி செய்வதோ, உரிய இழப்பீடு வழங்குவதோ ரயில்வேத் துறையின் கடமை. இத்தகைய விவகாரங்களை கவனிப்பதற்காக “ரயில்வே கிளைம்ஸ் டிரைப்யூனல்” (http://www.rct.indianrail.gov.in/) என்ற அமைப்பும் உள்ளது.
தற்போது ரயில் பயணத்திற்கான டிக்கெட் வாங்கும்போது, தனியாக காப்பீடு செய்து கொள்ளச் சொல்கிறார்கள். இணையம் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும்போது இதற்கான ஆப்சன் இருக்கிறது. ஸ்ரீராம் ஜெனரல் இன்ஸூரன்ஸ் நிறுவனம் இந்த காப்பீட்டை தருகிறது.
அப்படியானால் பயணிகளின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்க முடியாத நிலைக்கு ரயில்வேத்துறை தள்ளப்பட்டிருக்கிறதா?
இதுவரை பயணிகளின் இழப்பிற்கு அளித்துவந்த இழப்பீட்டை இனி ரயில்வேத்துறை இனிமேல் அளிக்காதா?
அதுமட்டுமல்ல…
அரசுத்துறையிலேயே நான்கைந்து ஜெனரல் இன்ஸூரன்ஸ் நிறுவனங்கள் இருக்கும்போது ஏன் தனியார் நிறுவனத்திற்கு இந்த வாய்ப்பை அளிக்க வேண்டும்?
ரயில்வே துறை பதில் சொல்லுமா?