ஹாங்ஸு:
உலகப் புகழ் பெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் மீது ஐரோப்பிய யூனியன் ரூ. 96,500 கோடி (1,300 கோடி யூரோ) அபராதம் விதித்த்துள்ளது. முறையற்ற வரிச்சலுகையால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய யூனியன் தலைவர் அறிவித்து உள்ளார். மேலும் இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு எதிரானது அல்ல என்றும் ஐரோப்பிய யூனியன் விளக்கமளித்துள்ளது.
ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள சீனா வந்துள்ள ஐரோப்பிய யூனியன் தலைவர் ஜான் கிளோட் ஜங்கர்
இதுகுறித்து கூறியதாவது:
அயர்லாந்தில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வரும் ஆப்பிள் நிறுவனம், சட்ட விரோதமாக பல வரிச் சலுகைகளை அந்த நாட்டு அரசிடம் பெற்றுள்ளது என்று ஐரோப்பிய யூனியனின் விசாரணைக் குழு அறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் அயர்லாந்தில் தொழில் தொடங்க வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அயர்லாந்து அரசு ஊக்குவித்து வருகிறது. இதையடுத்து ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் அங்கு தொழில் தொடங்க முன் வந்துள்ளது. அவர்களுக்கு ஏராளமான வரிச் சலுகையை அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த சலுகைகள் ஐரோப்பிய யூனியன் விதிமுறைகளுக்கு எதிரானதாகும்.
கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையின் முடிவில், பன்னாட்டு நிறுவனங்களுக்கு அயர்லாந்து அளித்த சலுகை முறைகேடானது என்று தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனம் மட்டுமே முந்தைய ஆண்டுகளுக்கான வரியாக ரூ. 96,500 கோடி (1,300 கோடி யூரோ) தொகையை வரி உள்ளிட்ட அபராதமாக அயர்லாந்துக்கு செலுத்த வேண்டும் என்று ஐரோப்பிய யூனியனின் விசாரணைக் குழு உத்தரவிட்டது.

இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு எதிரானது என ஒரு சிலர் கூறுகின்றனர். ஆனால், இதனை அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கையாகக் கருதக் கூடாது. அயர்லாந்தின் தவறான தொழில் கொள்கையால் ஐரோப்பிய யூனியனுக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனை சீர் செய்ய வேண்டியது அவசியம் என்றார்.
இந்த நடவடிக்கையால் அமெரிக்க நிறுவனங்களைவிட அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது ஐரோப்பிய நிறுவனங்கள்தான் என்றும் தலைவர் ஜான் கிளோட் ஜங்கர் கூறினார்.
Patrikai.com official YouTube Channel