டில்லி:
 ஆர்.எஸ்.எஸ். பற்றி நான் கூறிய கருத்தில்  உறுதியாக இருக்கிறேன். பின் வாங்கும்  உத்தேசமில்லை என்று ராகுல் காந்தி கூறி உள்ளார்
rahul
மகாத்மா காந்தியடிகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தான் தெரிவித்த கருத்தில் உறுதியாக உள்ளதாகவும், மன்னிப்பு கேட்க முடியாது எனவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், மகாராஷ்டிராவில் உள்ள தானே மாவட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது, மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்றது ஆர்.எஸ்.எஸ். தான் என்றும், அவர்கள்  இன்று காந்திஜியை கொண்டாடி வருவதாகவும் ராகுல் காந்தி பேசினார்.
ராகுல் காந்தியின்  பேச்சு குறித்து, ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ராஜேஷ் குண்ட்டே அவர் மீது வழக்கு தொடுத்தார். இந்த மனுமீதான விசாரணையில், நிதிமன்றத்தில் ஆஜராகும்படி  ராகுல் காந்திக்கு உத்தரவிட்டது.
ஆனால், ராகுல்காந்தி, நீதிமன்றத்தின்  உத்தரவை ரத்து செய்யக்கோரி மும்பை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மும்பை உயர்நீதிமன்றம்  ராகுலின் மனுவை நிராகரித்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ். குறித்து பேசியதற்கு ராகுல் காந்தி மன்னிப்பு கேட்டால், வழக்கை முடித்துக் கொள்ளலாம் என அறிவித்தது.
இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ராகுல் காந்தி திரும்பப் பெற்றுக் கொண்டார்.  ஆனாலும், நான் கூறிய கருத்தில் உறுதியாக உள்ளேன் என்றும், இதிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.  மேலும் வழக்கு விசாரணைக்கு நான் தயாராக உள்ளேன் என்றும் ராகுல் காந்தி கூறி உள்ளார்.