காஷ்மீர்:
காஷ்மீர் சர்வதேச எல்லைப்குதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை தடுத்து துப்பாக்கி சூடு நடத்தியபோது, குண்டு பாய்ந்து எல்லை பாதுகாப்பு படை வீரர் பலியானார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், அக்னூர் செக்டாரில் சர்வதேச எல்லை பகுதி உள்ளது. இதன் வழியாக நேற்று இரவு பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றனர். அந்த பகுதியில் ரோந்து பணியில் இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கண்காணிப்பதை அறிந்த தீவிரவாதிகள், அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதை எதிர்த்து பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர்.
எதிர்பாராத இந்த தாக்குதலில் இந்திய எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர் நாயக் ராஜேந்தர் சிங் பரிதாபமாக இறந்தார். மற்றொரு வீரர் படுகாயமடைந்தார். இந்திய வீரர்களின் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்குள்ளே சென்று விட்டனர். இதனால் ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, எல்லைப் பகுதியில் வீரர்கள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். தீவிர ரோந்துப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.