கான்பூர்:
உ.பி. அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததால் நோய்வாய் பட்டிருந்த சிறுவன் தந்தையின் தோளிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பசல்கஞ்ச் என்ற இடத்தை சேர்ந்த சுனில்குமார் என்பவரின் அன்ஸ். கடும் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற அன்ஸ் காய்ச்சல் குணமாகாததால், அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும்படி தனியார் மருத்துவமனை மருத்துவர் கூறியதன் பேரில், தனது 12 வயது மகனை தோளில் சுமந்தபடி கான்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றார்.
ஆனால் கான்பூர் அரசு மருத்துவமனையில் அன்சை சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டது. அன்சை அருகில் குழந்தைகளுக்கான மருத்துவமனைக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டது. காய்ச்சல் மோசமாக இருப்பதால் இங்கேயே அனுமதியுங்கள் என்று சுனில்குமார் மருத்துவர்களிடம் வேண்டினார். ஆனால்
மருத்துவர்கள் எதற்கும் செவிசாய்க்க மறுத்து விட்டனர்.
அதன் காரணமாக மீண்டும் தன் மகனை தோளில் சுமந்தபடி குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் தந்தை தோளில் படுத்திருந்தபடியே கொண்டுசெல்லும் வழியில் அன்ஸ் உயிரிழந்தான்.
குழந்தைகள் மருத்துவமனையில் அவனை பரிசோதித்த மருத்துவர், அவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து தனது மகனின் உடலை தோளில் சுமந்தபடியே சுனில்குமார் தனது வீட்டுக்கு சென்றார்.
இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த வாரம் ஒரிசாவில் இறந்த மனைவியின் சடலத்தை தோளில் போட்டுக்கொண்டு, மகளுடன் 10 கி.மீ நடந்து சென்ற கொடுமை, மருத்துவமனை வாகன வசதியை ஏற்படுத்தி தராததால் இறந்துபோன மனைவியை தோளில் தூக்கிப்போட்டு 10 கி.மீ நடந்து சென்ற கணவரின் படம் சமுக வலைதளங்களில் பரவி மக்களின் மனநிலையை எடுத்துக்காட்டியது.
அதையடுத்து பஸ்சில் பயணம் செய்தபோது இறந்த மனைவியை நடுக்காட்டில் பஸ் டிரைவரால் இறக்கி விடப்பட்ட மோசமான சம்பவம் நடந்தேறியது.
தற்போது இந்த பரிதாபகரமான சம்பவம் ஏற்பட்டுள்ளது.