புதுடில்லி:
அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற இருக்கும் 5 மாநில சட்டசபை தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் இப்போதே முழு வீச்சில் இறங்கி உள்ளது. கறுப்பு பணத்தை தடுக்க அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது.
உ.பி., பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநிலங்களில், அடுத்தாண்டு ஆரம்பத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அரசியல் கட்சிகள், தற்போதே, பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
உத்தரபிரதேசத்தில் எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று இப்போதே பா.ஜ.தேசியத் தலைவர் அமித் ஷா நேரடியாக களமிறங்கி உள்ளார்; அவரது மேற்பார்வையில், மத்திய அமைச்சர்கள், முன்னணி தலைவர்கள் தேர்தல் வேலைகளில் இறங்கி உள்ளனர்.
அதேபோல் பஞ்சாபில், ஆம் ஆத்மி கட்சி, அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அனல் பறக்கும் பிரசாரத்தை துவக்கியுள்ளது.
தற்போது உ.பி ஆண்டு வரும் ஆளும்கட்சியான சமாஜ்வாதி கட்சி, முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமை யில் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
காங்கிரசும் தன் பங்குக்கு , டெல்லி முன்னாள் முதல்வர் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது.
பகுஜன் சமாஜ், வேட்பாளர்கள் பட்டியலை ஏற்கனவேஅறிவித்து விட்டது. அனைத்து கட்சிகளும் இபோதே தேர்தலுக்கு தயாரான நிலையில் உள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி கூறியதாவது: தேர்தல் ஆணையமும் 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. வரைவு வாக்காளர் பட்டியல் ஏற்கனவே தயாராகி விட்ட நிலையில், இறுதி கட்ட பணிகள், தற்போது நடக்கின்றன.
தற்காலங்களில் நடைபெறும் தேர்தல்களில், ஓட்டுக்கு துட்டு என்று அரசியல் கட்சிகள் பணம் கொடுக்கும் நடைமுறை வழக்கமாகி உள்ளது. இதை கருத்தில் கொண்டு தேர்தல் ஆணையம் விரைவில் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், அரசியல் கட்சிகளின் பண பலத்தை முறியடிக்க வியூகம் வகுத்துள்ளது. இதற்காக, வருமான வரித்துறையைச் சேர்ந்த, 200 அதிகாரிகளை பார்வையாளர்களாக நியமிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
ஒவ்வொரு தேர்தலிலும், இதுபோன்ற நடவடிக்கைகள் வழக்கமான ஒன்றுதான் என்றாலும், ஐந்து மாநில சட்டசபை தேர்தலில், அதிக அளவு கறுப்பு பணம் புழங்கும் என, தேர்தல் ஆணையம் மதிப்பிட்டுள்ளது.
எனவே, இதுவரை இல்லாத வகையில், 200 வருமான வரித்துறை அதிகாரிகள், பார்வை யாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, மத்திய நேரடி வரிகள் வாரியத்திற்கு, தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. ஆறு மாதங்களுக்கு மாற்றுப்பணியாக இவர்கள், தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்களாக செயல்படுவர்.
சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில், பணப்புழக்கம் குறித்த விபரங் களை திரட்டுவதுடன், கறுப்பு பண நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியிலும் இவர்கள் ஈடுபட உள்ளனர்.
தொகுதிகள் வாரியாக ஒவ்வொரு தொகுதியிலும், பெருமளவில் வங்கியில் இருந்து பணம் எடுக்கப் படுவதை நிதி புலனாய்வு பிரிவு கண்காணித்து, அதுதொடர்பான தகவல்களை, பார்வையாளர் களுக்கு அனுப்பி வைக்கும்.
அதன் அடிப்படையில், பார்வையாளர்கள் அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பர். இவர்கள் அளிக்கும் தகவலின் அடிப்படை யில், வேட்பாளரின் தேர்தல் செலவுகள் கணக்கிடப் படும்.
தொகுதிகள் வாரியாக நியமிக்கப்படும் தேர்தல் ஆணைய பார்வையாளர்கள், பல்வேறு மட்டங்களில் செயல்படும் தேர்தல் ஆணைய ஊழியர்கள் குறித்த பட்டியலை தயார் செய்யும்படி, அந்தந்த மாநிலங்களுக்கு பொறுப்பு வகிக்கும், தலைமை தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.